உள்ளூராட்சி சபையின் ஆட்சிக்காலத்தை நீடித்து தைரியம் இருந்தால் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால்விடும் மஹிந்த ஆதரவு அணி. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியை ஏற்படுத்தும் போராட்டம் தொடருமென்றும் அறிவித்தது.
நாராஹேன்பிட்டியிலுள்ள அபேராம விஹாரையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாசு, தினேஷ், விமல் மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் மஹிந்த ஆதரவு அணியின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய தினேஷ் குணவர்த்தன எம்.பி. எதிர்வரும் மே 15 ஆம் திகதி உள்ளூராட்சி சபைகளின் ஆட்சிக்காலம் நிறைவடைகின்றது. எனவே அனைத்து உள்ளூராட்சிசபைகளினதும் ஆட்சிக்காலம் முடிவடைந்தவுடன் ஒரே தினத்தில் புதிய தேர்தல் முறைமைக்கு தேர்தல் நடத்துமாறு அரசிடம் பாராளுமன்றத்தில் கோரிக்கை முன்வைத்தோம்.
அமைச்சர் கருஜயசூரிய இதனை ஏற்றுக்கொண்டார். ஆனால் இன்று இந்த உறுதி மொழியை மீறி அரசு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தவுள்ளது. இதனை கண்டிக்கின்றோம். எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு பின்னர் எல்லை நிர்ணயங்கள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அரசாங்கம் 100 நாள் திட்டத்தை முன்வைத்தே மக்கள் ஆதரவை பெற்றனர். 100 நாள் தாண்டிவிட்டது. எனவே ஆட்சியை தொடர்வதற்கு இந்த அரசாங்கத்திற்கு தார்மீகக் கடப்பாடு கிடையாது. எனவே தைரியமிருந்தால் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும். சிறுபான்மை அரசுக்கு தொடர்ந்தும் ஆட்சியிலிருக்க முடியாது. இது அரசியலமைப்பு ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பிழை. சிறுபான்மை அரசாங்கம் என்பதை பிரதமர் ரணிலே ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனவே மேலும் காலத்தை கடத்தக்கூடாது என்றும் தினேஷ் குணவர்த்தன எம்.பி தெரிவித்தார்.
வாசுதேவ நாணயக்கார எம்.பி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்கும் எமது போராட் டம் தொடரும்.
சிறுபான்மையான இந்த ஐ.தே.கட்சி அரசை வீட்டுக்கு அனுப்புவதே எமது முதற்கடமையாகும். இன்று இடம்பெறும் கூட்டத்தில் மக்கள் இதனை வலியுறுத்துவார்கள் என்று இங்கு கருத்து தெரிவித்த வாசுதேவ நாணயக்கார எம்.பி கூறினார்.
விமல் வீரவன்ச எம்.பி
அரசின் அடக்கு முறைக்கு நாம்
அடிபணிய மாட்டோம். சிறைச்சா
லைகளை காண்பித்து ஜனநாயகத் திற்கான எமது போராட்டத்தை தடுத்து விட முடியாது என்று இங்கு கருத்து தெரிவித்த விமல் வீரவன்ச எம்.பி. கூறினார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தனவும் கலந்து கொண்டார்.
0 Comments