வாழைச்சேனை பிரதேச சபைக்குரிய காணியில் பள்ளிவாசல் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக மட்டக்களப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இக்குற்றச்சாட்டை முன்வைத்த அவர் பேசியதாவது,
குறித்த காணி 60 வருட காலமாக பிரதேச சபையினால் பராமரிக்கப்படுகின்றது. 1958ம் ஆண்டில் பிரதேச சபையினால் கட்டப்பட்ட கிணறும் 1986ம் ஆண்டில் கட்டப்பட்ட கட்டிடமும் அக்காணியில் இருக்கின்றன. இப்படி இருக்கையில் இந்தக் காணிக்கான உறுதி தனி நபரின் பெயரில் எழுதப்பட்டு அவரால் பள்ளிவாசலுக்கு கையளிப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இது விடயமாக தெளிவுபடுத்துமாறு கூட்டத்துக்கு தலைமை வகித்த பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கோரளைப்பற்று பிரதேச சபை செயலாளரைப் பணித்தார். குறித்த காணி பிரதேச சபைக்கே உரியது என்றும் அதனை பள்ளிவாசலுக்கு கையளிப்பதற்கான சாத்தியம் எதுவும் இல்லை என்றும் தான் அறிந்த வரையில் குறித்த காணியில் பிரதேச சபையின் கிணறு காணப்படுகிறது. என்றும் செயலாளர் குறிப்பிட்டார்.
மேலும் செங்கலடி எல்லை நகர் வீட்டுத்திட்ட மைதானம் கடந்த 50 வருடமாக பொதுமக்களால் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை நீதிமன்றத்தின் தேவைக்காக கையளிப்பதற்கு ஏறாவூர் நகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் குற்றம் சுமத்தினார்.
இது பற்றி விளக்கமளிக்குமாறு பிரதியமைச்சர் செங்கலடி பிரதேச செயலாளரைக் கேட்டுக்கொண்டார். பிரதேச செயலாளர் உ. உதயசிறிதர் பதிலளிக்கையில் எல்லைநகர் விளையாட்டு மைதானம் அமைந்துள்ள காணி அரச காணியாகும். அருகிலுள்ள வீடமைப்புத்திட்டத்துக்கான மைதானம் என்றே அக்காணி அழைக்கப்படுகின்றது. இந்த மைதானத்தை நமக்கு கையளிக்குமாறு கோரி ஏறாவூர் நகர சபை எனக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதில் இருந்து நகர சபையிடம் குறித்த மைதானத்துக்கான ஆவணம் இல்லை என்பது நிரூபணமாகிறது என்றார்.
இதனை அடுத்து அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவரான முதலமைச்சர் ஹாபிஷ் நஸீர் அகமட் கருத்து தெரிவிக்கையில் குறித்த மைதானத்தின் வேலைகளை மேற்கொள்வதற்காக நீதிமன்றம் ஒப்பந்தகாரருக்கு கையளித்துள்ளது. எனவே இதில் நாம் தலையிட முடியாது. அதே நேரம் நீதிமன்றத்துக்கு வேறு காணியை வழங்க வேண்டும். எல்லைநகர் விளையாட்டு மைதானத்தை பொதுமக்கள் வழமைபோல் பயன்படுத்துவதற்கு வழங்குவதற்கு நாம் அனைவரும் உடன்படுகிறோம். எனவே இந்த மைதானப் பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு குழுவை நியமிப்போம் என்றார்.
0 Comments