மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலை புலிகளின் முக்கியஸ்தர்களாகவும் பொறுப்பாளர்களாகவும் இருந்தவர்கள் அரசாங்கத்திடம் கைக்கூலியாக மாறியதும் தமது உறவினர்களின் பெயரில் வெளிநாட்டு வங்கிகளில் பணம் வைப்புச் செய்துள்ளதுடன், சொத்துக்களையும் சேகரித்து வைத்துள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
செங்கலடி கரடியனாறு மணிப்புரம் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர்,
இறுதியாக எமது இனத்திற்காக குரல் கொடுத்தவர்களை அவர்களுக்கு ஆதரவு வழங்காமையினால் கொலை செய்தமை மற்றும் கப்பம் பெற்றமை தொடர்பிலான தகவல்களைச் சேகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் தமிழர்கள். எமக்கு நீண்ட பாரம்பரிய வரலாறு இருக்கின்றது, தமிழர்களுக்கான நியாயமான தீர்வினை வழங்க வேண்டிய கடமை தற்போதைய அரசாங்கத்திற்கு காணப்படுகின்றது.
தமிழர்களாகிய நாம் தேசிய இனமாகவும், பூர்வீக இனமாகவும் இருக்கின்றோம். எமது பல போராட்டங்கள் இந்த மண்ணில் இடம்பெற்றது.
தந்தை செல்வா அவர்களின் தலைமையில் அகிம்சைப் போராட்டங்களை நடாத்தினோம், பல ஒப்பந்தங்கள் இந்த நாட்டின் வட, கிழக்கு பகுதிகள் தமிழர்களின் பூர்வீக பகுதிகள் என்பதனை தெளிவுபடுத்துகின்றன.
ஆனாலும் அதனை பொய்யாக்க நாட்டில் இருக்கின்ற பேரினவாதிகள் முயற்சித்து கொண்டிருக்கின்றனர்.
ஆளும் கட்சியினால் எடுக்கப்படும் தீர்மானங்களை எதிர்கட்சி எதிர்த்து வருகின்ற நிலையே நாட்டில் காணப்பட்டு வருகின்றது.
இதன் போது அகிம்சை ரீதியில் போராடி அதற்கு சரியான தீர்வு கிடைக்காத பட்சத்தில் எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அநீதிகளுக்கு எதிராக எமது இளைஞர்கள் ஆயுத ரீதியில் போராடினார்கள்.
இருப்பினும் 2009ம் ஆண்டு மே மாதத்துடன் இந்த ஆயுதப் போராட்டம் மௌனித்ததன் பின்னர் அதனை மேற்கொண்டு நடாத்த வேண்டிய பாரிய பொறுப்பு எமது மக்களால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டது.
அந்த வகையில் 2010ம் ஆண்டு தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு அன்றிலிருந்து இன்றுவரை எமது மக்களுக்காகவே உழைத்துக் கொண்டிருக்கின்றோம்.
இந்த நாட்டின் கடந்த மஹிந்தவின் அரசு எல்லாக் கட்சிகளையும் உடைத்தது. இலஞ்சம், அமைச்சுப் பதவிகளை காட்டி அனைவரையும் பிரித்தது.
ஆனால் அதற்கெல்லாம் இடம்கொடுக்காத கட்சியாக எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருந்தது.
நாங்கள் நினைத்திருந்தால் மஹிந்த அரசில் இணைந்து பல சலுகைகளை பெற்றிருப்போம் பல சௌகரியங்களுடன் சொகுசாக வாழ்ந்து ஆடம்பர வாகனத்தில் திரிந்திருப்போம்.
மக்கள் மத்தியில் வந்து வீடு தருவோம் கிணறு தருவோம் மலசல கூடம் தருவோம் என்று கூறி வாக்கு கேட்டிருப்போம்.
ஏனெனில் பலரும் அவ்வாறு தான் இருந்தார்கள்.
ஆனால் நாம் அவ்வாறு செல்லவில்லை. இனியும் அவ்வாறு செய்யப் போவதுமில்லை.
ஏனெனில் இந்த நாட்டில் எமது இனம் தேசிய இனமாக இருந்து சிறுபான்மை என்று சொல்லி சிங்கள அரசாங்கம் எங்களை அடக்கி வந்தது.
எங்களது உரிமைகள் அத்தனையிலும் கை வைத்தது. அத்துடன் எமக்கு நியாயமாக தரவேண்டிய அரசியல் உரிமைகளையெல்லாம் மறுத்து வந்தது. இவ்வாறு இருந்த நிலையில் தான் எமது இளைஞர்கள் பல தியாகங்களைச் செய்தார்கள்.
நாம் இவர்களின் பின்னால் போயிருப்போமாக இருந்தால் அவர்களின் அத்தனை தியாகங்களும் கொச்சைப் படுத்தப்பட்டிருக்கும்.
தங்களின் உயிரைச் துச்சமாக மதித்து அவர்கள் இந்த மண்ணிலே இதற்காகவா? போராடினார்கள் சிந்தியுங்கள் மக்களே!
ஆனால் எவ்வளவு தூரம் கடந்த அரசாங்கம் எம்மை நசுக்கியும் அரசாங்கத்தின் கையாளிகளும் நசுக்கியும் நாங்கள் தர்மத்திற்காக எமது மக்களுக்காக எமது கொள்கையில் மாறாதிருக்கும் போது எமது சகோதரர்களுடன் ஒன்றாக ஆயுதம் தூக்கிப் போராடியவர்கள் அரசாங்கத்தின் சொகுசு வாகனங்கள் வாழ்க்கைக்காக, அமைச்சுப் பதவிகளுக்காக, கோடிக்கணக்காக உழைப்பதற்காக எமது இனத்தை விற்று சென்றார்கள்.
நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சிப் பிரதிநிதிகள் நாங்கள் யாரும் எமது மக்களின் பிள்ளைகளை வீட்டுக்கு வந்து அடித்துப் பறிக்கவில்லை.
நீங்கள் பிள்ளைகளைத் தரவில்லை என்பதால் உங்களை வெளியேற்றவில்லை.
தற்போது இது தொடர்பான விடயங்கள் வெளிவருகின்றன.
அந்த தாய்மார்களால் நீதி நியாயம் கேட்கப்படுகின்றது. இதற்கு அனைவரும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
வீட்டுக்கு வீடு பிள்ளை கேட்டு இல்லையெனில் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
இதனை வன்னியில் இருந்து வந்தவர்கள் செய்யவில்லை.
இந்த மண்ணில் தாங்கள் தான் தளபதி பொறுப்பாளர்கள் என்று இருந்தவர்கள் செய்தார்கள்.
ஆனால் அரசாங்கத்திடம் அவர்கள் கைக்கூலியாக மாறியதும் அரசின் சொத்துக்கள் சுகபோகங்களுக்கும் ஆளாகி எமது மக்களை விற்று தங்கள் வாழ்க்கையை நடாத்த ஆரம்பித்தார்கள்.
எமக்கு என்னவெல்லாம் அநீதி செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்தார்கள்.
அவர்கள் அமைச்சுப் பதவியை எடுத்த போது கூட அவர்கள் எமது மக்களின் துன்பியலை தீர்க்கவில்லை.
எந்த விதத்திலும் துன்பப்பட்ட மக்களின் துன்பியலை தீர்ப்பது அந்த நாட்டு அரசாங்கத்தின் கடமை அவ்வாறு இருக்கையில் இந்த அரசாங்கத்துடன் இணைந்தவர்கள் தங்கள் வாழ்க்கையையே வளப்படுத்தினார்கள்.
வெளிநாட்டு வங்கி வைப்பு உறவினர்களின் பெயரில் சொத்துக்கள் என்றெல்லாம் குவித்து வைத்திருக்கின்றார்கள்.
இறுதியாக எமது இனத்திற்காக குரல் கொடுத்தவர்களை அவர்களுக்கு ஆதரவு வழங்கவில்லை என்பதற்காக கொலை செய்தார்கள்.
கப்பம் பெற்றார்கள் அதற்கெல்லாம் ஆதாரங்கள் தற்போது சேகரித்துக் கொண்டிருக்கின்றேன்.
இவ்வளவு சம்பவம் நடந்த பின்பும் தற்போதும் அவர்களுக்கு ஆதரவு வழங்கும் சிலர் இருந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.
நான் அவர்களிடம் கேட்கின்றேன் அவர்களிடம் கொண்டு வந்து விடுகின்றேன் அவர்களால் கடத்தப்பட்டவர்கள் காணாமல் போனவர்களின் உறவுகளை உரியவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு பதில் பெற்றுக் கொடுப்பீர்களா என்று கேட்கின்றேன்.
தர்மம் கதைப்பதற்கு முதலில் அவர்கள் தகுதியானவர்களாக இருக்க வேண்டும்.
முன்னர் கிராமத்திற்கு அபிவிருத்தி செய்யும் போது அதனை முன்பிருந்தவர்கள் தாங்கள் தான் கொண்டு வந்து எமது மக்களுக்கு கொடுப்பதாக கூறி வேடம் பூண்டார்கள்.
ஆனால் தற்போது அவர்கள் இல்லை அந்த அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெறவில்லையா.
ஆனால் தற்போது ஒரு வித்தியாசம் இருக்கின்றது என்னவென்றால் கடந்த முறை அவர்களுக்கு ஒரு தொகைப் பணம் இலஞ்சமாக கொடுக்கப்பட்டது.
ஆனால் அந்த நிலை தற்போது இல்லை நான் மக்களுக்கு கூறிக் கொள்வது ஒன்றுதான் அபிவிருத்தித் திட்டத்திற்கு வரும் பணத்தில் எவருக்கும் எந்த அதிகாரிக்கும், எந்த அரசியல்வாதிக்கும் பணம் கொடுக்கக் கூடாது.
கிடைக்கப்பெற்ற பணம் அனைத்தும் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
இதை முன்பிருந்த எவரும் கூறியிருக்க மாட்டார்கள். அப்பணம் முழுவதையும் முழுமையாகப் பயன்படுத்துங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு கூறும் துணிச்சல் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு மாத்திரமே இருக்கின்றதே தவிர முன்பிருந்த அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருந்த ஒட்டுண்ணிகள் எவருக்கும் இருக்கவில்லை.
நாம் எமது மக்களுக்காக எம்மால் இயன்றவரை குரல் கொடுத்துக் கொண்டு இருக்கின்றோம் நாங்கள் அபிவிருத்தி செய்யவில்லை என்று நீங்கள் குறை நினைக்கலாம் நாங்கள் அபிவிருத்தி செய்தால் எமது அபிலாசையை விற்றுவிட்டுதான் அபிவிருத்தி செய்திருக்க வேண்டும் எமது மக்கள் இதுவரை செய்த தியாகங்களை துஷ்பிரயோகம் செய்து விட்டுத்தான் இந்த அபிவிருத்தியைச் செய்திருக்க வேண்டும்.
ஆனால் தற்போது சற்று காலம் மாறிவிட்டது.
தற்போது இருக்கின்ற அரசாங்கம் கூட எமக்கு அமைச்சுப் பதவி தருவதாக அழைத்தது.
நாம் போயிருந்தால் இவ் அரசாங்கம் விடுகின்ற தவறைக் கூட நாம் பார்த்துக் கொண்டிருக்கத்தான் வேண்டும்.
ஆனால் நாம் எமது மக்களின் அபிலாசைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வந்தவர்கள் அதற்காக இனியும் நாம் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருப்போம் அதற்காக தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் மற்றும் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
பிரான்பற்று புளியடி வைரவர் ஆலயத்தில் 113 ஆடுகள் பலியிடப்பட்டது கண்டிக்கத்தக்கது: யோகேஸ்வரன்
யாழ்ப்பாணம் வலி தென்மேற்கு மானிப்பாய் பிரதேச சபைக்குட்பட்ட பண்டத்தரிப்பு பிரான்பற்று புளியடி வைரவர் ஆலயத்தில் 113 ஆடுகள் பலியிடப்பட்ட விடயமானது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் என மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,மிருகவேள்வி என்ற வகையில் யாழ் மாவட்டத்தின் சில ஆலயங்களிலும் நூற்றுக்கணக்கில் ஆடுகள் வெட்டப்படுவது சைவ மக்களின் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை குழிதோண்டி புதைக்கும் விடயமாகும்.
யாழ்ப்பாணம் சைவ சித்தாந்ததுடன் பின்னிப் பிணைந்த சமூகம், சமயத்தாலும், சமய வாழ்வியலாலும் தமிழ் மொழி தொடர்பாலும் இவர்கள் தனித்துவம் மிக்கவர்களாக விளங்குகின்றனர்.
அத்தோடு இத்தனித்துவ பண்பை புலம்பெயர் நாடுகளிலும் தமிழர் பேணி வருகின்றனர். இவ்வகையில் ஒரு காலத்தில் மனித பண்புக்கு மாறுபட்டவர்களால் தமது தேவைகளை நிறைவேற்றும் வகையில் அவர்களது உணவாக கொள்ளப்பட்டவைகளை யாகங்களில் பலியிட்டு தமது தேவைகளை நிறைவேற்றியது வேத கால வழிபாடாகும்.
இவ்வேதகால வழிபாட்டின் பின் எழுந்த ஆகம கால வழிபாட்டில் உயிர் பலிகள் நிறுத்தப்பட்டு நீற்றுப் பூசணிக்காய் போன்றவைகளை இதற்கு பதிலாக பயன்படுத்தி யாகங்கள், ஓமங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரை பெரும்பாலும் வேதகால வழிபாடுகள் நடாத்தப்படும் இடமாக விளங்குகின்றது. பொதுவாக கிராமிய வழிபாட்டுக்கு பெயர்போனது.
இவர்கள் “தெய்வம் ஆடுதல்” என்ற விசேட சடங்கு முறைகள் மூலம் தங்களது கிராமிய வழிபாடுகளை பக்தி பூர்வமாக நடாத்தி வருகின்றனர். இதில் தமிழ் மந்திரங்கள் முதன்மை பெறுகின்றது. இத் தமிழ் மந்திரங்களின் மூலம் பக்தி மார்க்கமாக வழிபாடு நடாத்துகின்றனர்.
சடங்கு என்னும் இவ்வழிபாட்டு முறைகளில் சில இடங்களில் கடந்த காலங்களில் சில கோழிகள், ஆடுகள் பலியிடப்பட்டன. இவ்வாறான மாந்திரிக வழிபாட்டு முறைகளை மேற்கொண்ட கிழக்கு மாகாணத்தின் மாந்திரீக தன்மை காரணமாக சில பகுதி மக்களை கிழக்கு மாகாணம் சாராதவர்கள் “பேயோடு ஒட்ட வைப்பவர்கள்” என்று வித்தியாசமாக பாகுபடுத்திய காலமும் இருந்தது.
இக்காலவேளை ஒரு சில உயிர் பலிகள் கிழக்கு மாகாணத்தின் ஒரு சில ஆலயங்களில் நடைபெற்றது.
இவ்வேளை முன்னாள் கௌரவ இந்து விவகார பிரதேச அபிவிருத்தி அமைச்சரான மட்டக்களப்பை சேர்ந்த செ.இராசதுரை அவர்கள் ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் இவ் உயிர் கொலைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு தடுத்து நிறுத்தினார்.
தற்போது கிழக்கு மகாணத்தில் ஒரு சில ஆலயங்களில் மாத்திரம் சில கோழிகள், ஆடுகள் பலியிடப்படுகின்றது. அதையும் விரைவில் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்தை போன்று பல ஆலயங்களில் நூற்றுக்கணக்கில் ஆடுகள் பலியிடப்படுதல் மட்டக்களப்பு மாவட்டத்திலோ அல்லது கிழக்கு மாகாணத்திலோ நடைபெறுவதில்லை.
சைவத்தை வளர்த்த பெருமக்கள் பலர் பிறந்த யாழ் மண்ணில் வாய் பேசா மிருகங்கள் ஆலயங்களில் வேள்வி என்ற வகையில் பலியிடுவதை யாழ்ப்பாண சைவ சமூகம் ஏன் விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது கேள்விக் குறியே?
இருந்தாலும் ஒரு சில சைவ அமைப்புக்களும், சைவ பெருந் தொகையினரும் இதற்கு எதிராக குரல் கொடுத்து நடவடிக்கை எடுத்தாலும் பெரும்பாலான மக்கள் இதில் அக்கறை அற்று இருக்கின்றனர்.
இவ்வேளை அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்திலும் இவ் மிருகப்பலியை தடுக்கும் செயற்பாடு போடப்பட்டிருந்தும் இந்து கலாசார அமைச்சு கவனம் செலுத்தாமை வேதனைகளை தருகின்றது.
ஒரு பெரிய பிரசித்த பெற்ற ஆலயத்தின் தலைவரும், சைவ பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் வந்த இந்து கலாசார அமைச்சர் இவ்விடயத்தில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
அவர் அமைச்சராக இல்லாத வேளை பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இவ்விடயங்களை கண்டித்தார். அண்மையில் பூகம்பம் நிகழ்ந்த நேபாளத்திலும் இவ்வாறான மிருகபலியிடல் நடைபெற்றது, இம் மிருகங்களின் சாபமே இவ் அழிவுக்கு காரணம் என கூறப்படுகின்றது.
அதுமட்டுமன்றி இவ்வாறான உயிர் கொலைகள் நடாத்தப்படும் ஆலயங்களின் பகுதிகள் இயற்கை அனர்த்தத்தாலும், செயற்கைளாலும் பெரிதும் பாதிக்கப்படுவதையும், கடந்த கால வரலாறுகள் காட்டி நிற்கின்றது.
இவ்வாறான துன்பங்களை எதிர்காலத்திலும் நாம் எதிர்நோக்காத வகையிலும் எமது சைவ சமயத்தின் மேன்மையை பாதுகாக்கும் வகையிலும் இந்து ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் மிருக பலியிடல் செயற்பாட்டை உடனடியாக நிறுத்த அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது சைவத் தமிழரின் தலையாய கடமை என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவதுடன், இம்மிருகப் பலியிடலுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளுக்கும் எனது ஒத்துழைப்பு உண்டு என தெரிவிக்கின்றேன்.
இதனை தடை செய்ய இயன்ற வரையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் குறிப்பிடுகின்றேன் என இவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments