விடுதலை புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற யுத்தத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பல்வேறு முறையில் இடையூறு விளைவித்ததாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தேசிய தொலைக்காட்சி சேவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் கடற்படை தளபதி பாதுகாப்பு வாரிய கூட்டத்தில் போர் திட்டத்தை அவமதித்தார் என பீல்ட் மார்ஷல் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதிகளுக்கு எதிரான செயற்பாடுகளில் அதற்கான கௌரவம் உயிரிழந்த 25,000 இராணுவத்தினர் மற்றும் ஊனமுற்ற இராணுவத்தினருக்கு கிடைக்க வேண்டுமே தவிர எந்த அரசியல்வாதிக்கும் அல்ல என அவர் கூறியுள்ளார்.
மாவிலாறு அணைக்கட்டு தீவிரவாதிகளினால் மூடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் என்ன செய்வதென்று பாதுகாப்பு செயலாளர் வினவிய போது அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என நான்தான் உறுதியாக கூறினேன்.
எனினும் அதற்கான அரசியல் தலைவர்களின் அனுமதி கிடைக்கவில்லை, பின்னர் மக்களின் எதிர்ப்பு அதிகரிக்கப்பட்டமையினால் அவர்களுக்கு அனுமதி வழங்க நேரிட்டது.
நான் வாரத்திற்கு இரு முறை வவுனியாவிற்கு சென்று அங்குள்ள நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்ட போதிலும் அரசியல் தலைவர்கள் யுத்த காலகட்டத்தில் இரு முறை மாத்திரமே சென்றுள்ளார்கள்.
2009ம் ஆண்டு ஜனவரி மாதம் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவருமாறு முன்னாள் ஜனாதிபதி எனக்கு அழுத்தம் பிரயோகித்தார்.
இவ்வாறான ஒரு நிலைமையினாலே பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் உயிரிழந்தார்கள்.
யுத்தத்தின் போது 4 பேர் கொண்ட குழுக்களை அமைத்ததுடன், 1 இலட்சத்து 30 ஆயிரம் புதிய இராணுவத்தினரை இணைத்துக்கொண்டேன்.
எனினும் இவற்றை தான் செய்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் குறிப்பட்டது நகைப்புக்கிடமாகவுள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொழும்பில் இருந்த காலத்தில் செய்ததொன்றும் இல்லை, ஜெனரால் அனுருத்த ரத்வத்தே போன்று யுத்தத்திற்காக யாரும் அர்ப்பணிப்பு செய்யவில்லை.
இதேவேளை, கடற்படையினரால் பாரிய 09 ஆயுத கப்பல்களில் 07 கப்பல்களுக்கு இரகசிய தகவல் வழங்கியமை இலங்கை இராணுவத்தினர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அனைத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.


0 Comments