கிழக்கு மாகாண சபையில் 13வது அரசியலமைப்பு சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலமாகவே மாகாணத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க முடியும் என முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அகமட் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபையில் கிழக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் மாபெரும் நடமாடும் சேவை இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது.
எதிர்வரும் காலங்களில் 13வது அரசியல் அமைப்பு சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கான ஒவ்வொரு நடவடிக்கையினையும் நாங்கள் எடுக்கவுள்ளோம்.
இதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு முதல்வர்,
நாங்கள் மாகாண சபை என்று பெரிதாக கூறிக்கொண்டுள்ளபோதிலும் எங்களுக்கு எந்தளவு அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
13வது திருத்தச்சட்டம் என்று முழுமையாக அமுல்படுத்தப்படுகின்றதோ, அன்றுதான் இந்த மாகாணசபை முழுமையான அதிகாரங்கள் கொண்ட மாகாணசபையாக மாற்றப்படும்.
எதிர்வரும் காலங்களில் 13வது அரசியல் அமைப்பு சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கான ஒவ்வொரு நடவடிக்கையினையும் நாங்கள் எடுக்கவுள்ளோம்.
பொலிஸ் அதிகாரம்,காணி அதிகாரம் உட்பட அனைத்து அதிகாரங்களும் மாகாணசபைக்கு வழங்கப்பட வேண்டும்.
இந்த அதிகாரங்கள் வழங்கப்படும்போது இந்த மாகாணசபையில் உள்ள முழு பிரச்சினைகளையும் நாங்களே தீர்த்துக் கொள்கின்றதாக இந்த மாகாணசபை அமையும்.
மாகாண சபைக்குள் கிடைக்கும் வருமானங்கள், கிடைக்கும் நிதிகளை தாண்டி அபிவிருத்திக்காக நிதியை கொண்டுவரும் அதிகாரம் உள்ள மாகாண சபையாக மாறும்.
13வது சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை உள்வாங்கிய மாகாண சபையாக மாற்ற போராட வேண்டிய பொறுப்பு இங்குள்ள அனைத்து அரசியல்வாதிகளுக்கும் உள்ளது. அதற்காக நாங்கள் குரல்கொடுத்து வருகின்றோம்.
ஒரு நல்லாட்சி என்று கூறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலே இந்த நாட்டில் இருக்கின்ற இரண்டு மிகபெரிய கட்சிகள் இணைந்து ஓரு நல்ல அரசியல் கலாசாரத்தினை ஏற்படுத்தியுள்ள ஒரேயொரு காலகட்டம் இதுமட்டுமே.
எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் நடைபெற்ற அரசியல் காலங்களில் இவ்வாறான தீர்மானங்கள் கொண்டுவரும்போது எதிர்க்கட்சி எதிர்த்திருக்கலாம். ஆனால் அந்த சூழ்நிலையினை தாண்டிய அரசியல்நிலை ஏற்பட்டுள்ளவேளையிலும், இந்த 13வது அரசியல் அமைப்பு சட்டத்தினை அமுல்படுத்தவில்லையென்றால் ஒரு காலத்திலும் இந்த அரசாங்கம் அதனை வழங்கப் போவதில்லை.
அதனை வழங்க வேண்டிய கடப்பாடு ஜனாதிபதிக்கும் உண்டு,பிரதமருக்கும் உண்டு. ஆட்சியில் அவர்களை அமரவைத்ததில் அதிகளவு பங்களிப்பனை செய்துள்ளவர்கள் என்ற வகையில் அவர்களுக்கு அந்த கடப்பாடு உள்ளது என்றார்.
மட்டக்களப்பில் மாபெரும் நடமாடும் சேவை
கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு மாபெரும் நடமாடும் சேவை இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபையில் இந்த நடமாடும் சேவைகள் கிழக்கு மாகாண அனைத்து திணைக்களங்களையும் உள்ளடக்கியதாக நடைபெற்று வருகின்றது.
இந்த நடமாடும் சேவையில் காணி, விவசாயம், வீதி, வடிகான், வீடமைப்பு, பாடசாலை, ஆசிரியர்கள், மாணவர்கள், முதியோர், இளையோர், கிராம அபிவிருத்தி சங்கங்கள் என்று பல பிரச்சனைகளுக்கு தீர்வினை இங்கு பெற்றுக்கொள்ளக்கூடியதாக நடைபெற்று வருகின்றன.
இதன் ஆரம்ப விழா இன்று காலை கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட்டின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், காணி அமைச்சர் ஆரியவதி கலபதி உட்பட கிழக்கு மாகாண சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர், மாகாணசபை உறுப்பினர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது திணைக்கள ரீதியில் சிறப்பாக செயற்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன் சிறந்த பாடசாலைகளுக்கான பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் அதிதிகளினால் நடமாடும் சேவைகள் கூடங்களும் பார்வையிடப்பட்டதுடன் பொதுமக்களுடனான கலந்துரையாடலும் நடைபெற்றன.

0 Comments