Home » » இந்தோனேசியாவுக்கான தூதரை திரும்ப அழைத்தது ஆஸ்திரேலியா

இந்தோனேசியாவுக்கான தூதரை திரும்ப அழைத்தது ஆஸ்திரேலியா

இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக இரு ஆஸ்திரேலியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து, இந்தோனேசியாவுக்கான தூதரை ஆஸ்திரேலியா திரும்பப் பெற்றுள்ளது.
இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமையன்று இரவில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட எட்டுப் பேரில் ஆண்ட்ரூ சான், மயூரன் சுகுமாரன் ஆகிய இருவரும் ஆஸ்திரேலியர்கள்.
பிரேசிலைச் சேர்ந்த ரோட்ரிகோ குலார்ட் என்பருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், இதற்கு பிரேசில் அரசு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
ஆண்ட்ரூ சானையும் சுகுமாரனையும் காப்பாற்றுவதற்காக ஆஸ்திரேலியா ராஜதந்திர ரீதியில் பெரிய அளவிலான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
இது குறித்து செவ்வாய்க்கிழமையன்று கருத்துத் தெரிவித்த ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட், இந்த மரண தண்டனைகள் குரூரமானவை, தேவையற்றவை என்று குறிப்பிட்டார். அவர்கள் சிறையில் இருந்த காலகட்டத்தில் முழுமையாகத் திருந்திவிட்டார்கள் என்றும் கூறினார்.
“இந்தோனேசியாவின் இறையாண்மையை மதிக்கிறோம். ஆனால், இதனை நாங்கள் ஏற்கவில்லை. இது தொடர்பாக ஆலோசிப்பதற்காக நாங்கள் எங்கள் தூதரைத் திரும்ப அழைத்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார் டோனி அப்பாட்.
ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை இந்தோனேசியா மிக முக்கியமான ஒரு நாடு. பயங்கரவாதம், புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து பணியாற்றிவருகின்றன.
இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியா தனது தூதரை திரும்ப அழைப்பது இதுவே முதல்முறை.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபோது, கண்களை கட்டிக்கொள்ள எட்டுபேருமே மறுத்துவிட்டதாகவும் ஒன்றாகப் பாடலை இசைத்ததாகவும், அந்தத் தருணத்தில் உடனிருந்த பாதிரியார் ஒருவர் சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, அவர்களது உடல்களை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ்கள் வெளியேறின.
ரோட்ரிகோ குலார்ட்டேவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது, இரு நாட்டு உறவின் மிகத் தீவிரமான நெருடலை ஏற்படுத்தியிருப்பதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளது.
குலார்ட்டேவுக்கு மனச் சிதைவு நோய் இருப்பதால், அவருக்கு மரண தண்டனை வழங்கக்கூடாது என அவரது குடும்பத்தினர் கோரிவந்தனர்.
கடந்த நான்கு மாதங்களில் குலார்ட்டேவுடன் சேர்த்து பிரேசிலைச் சேர்ந்த இருவர் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டனர்.
கடந்த ஜனவரியில் மார்கோ ஆர்ச்செர் கார்டொசோ மொரைரா என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து, பிரேசில் தனது தூதரை திரும்ப அழைத்துக்கொண்டது.
ஒவ்வொரு நாளும் இந்தோனேசியாவில் போதைப் பொருள் பயன்படுத்துவதால் 33 பேர் மரணமடைவதாக அந்நாட்டின் தேசிய போதைப்பொருள் முகமை கூறுகிறது. இதன் காரணமாகவே இந்த விவகாரத்தில் கடுமையான நிலைப்பாடுகளை எடுப்பதாக இந்தோனேசியா கூறுகிறது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |