இலங்கை தமிழர் ஒருவர் நாடு கடத்தப்படுவதை கனேடிய பிராந்திய நீதிமன்றம் ஒன்று தடுத்துள்ளது.
அவர் பலாத்காரமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால், உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறியே நீதிபதி சீன் ஹரிங்டன் இந்த நாடு கடத்தலை தடுக்க உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்தவருக்கு இலங்கையில் ஆபத்தில்லை என்று கனேடிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்த கருத்தையும் அவர் நிராகரித்தார்.
விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் வரி அறவிடும் பணியை மேற்கொண்டு வந்தாக கூறப்படும் புவநேசன் துரைராஜா என்பவர் தொடர்பிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இவர் பிரித்தானியாவுக்கு சென்று அடைக்கலம் கோரியபோதும் அது நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து போலியான கடவுச்சீட்டை காண்பித்து அவர் கனடாவுக்குள் பிரவேசித்தார்.
இந்தநிலையில் போர்க்காலத்தில் விடுதலைப்புலிகள் பலாத்காரமாகவே வரியை அறிவிட்டனர் என்ற அடிப்படையில் அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
விடுதலைப் புலிகளின் நிதி திணைக்களத்தில் பணியாற்றியமை காரணமாக அவருக்கு விடுதலைப் புலிகள் மேற்கொள்கின்ற குற்றங்கள் தெரிந்திருந்தன என்றும் பொலிஸார் புவநேசன் மீது குற்றம் சுமத்தியிருந்தனர்.
எனினும் புவநேசன் குற்றத்தை செய்ய பயன்படுத்தப்பட்டவரே ஒழிய குற்றமுள்ளவர் அல்லர் என்று நீதிபதி தமது தீர்ப்பில் எழுதியுள்ளார்.
எனவே இலங்கையில் அவருக்கு பாதுகாப்பு பிரச்சினை உள்ளமையால் அவர் கனேடிய பாதுகாப்பில் இருக்க வேண்டியவர் என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments