ஒருமித்த நாட்டில் ஒரு நிலைத்த நீடித்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வை வேண்டியே தமிழ் மக்கள் நீண்டகாலத்திற்குப் பின் ஜனநாயகத்திற்கு தமது பரிபூரண ஆதரவை வழங்கியுள்ளார்கள் எனத் தெரிவித்துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அந்த ஆதரவின் மீது விசுவாசமுடையவர்களாகவும் தமிழ் மக்கள் காணப்படுகின்றனர். இந்த மக்களது நம்பிக்கையை அரசாங்கம் கட்டிக்காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலத்தில் சர்வாதிகார ஆட்சி காணப்பட்டாதாக குறிப்பிட்டவர் அந்த நிலைமையில் மாற்றம் ஏற்படவேண்டும் எனவும் சுபீட்சமான நல்லாட்சிக்காகவுமாகவே தமிழ்மக்கள் வாக்களித்ததாகவும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திற்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இந்த நாட்டில் வாழும் சகல மக்களும் பங்களிப்புச் செய்ததன் பேரிலேயே தாங்கள் அரசியல் ரீதியாக ஒரு ஜனாதிபதியை தோற்கடித்து முதன் முதலாக ஜனாதிபதியாகியுள்ளீர்கள். முறையாக பதவியிலிருந்த ஜனாதிபதியை தாங்கள் தோற்கடித்திருக்கின்றீர்கள்.
வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என அனைத்து பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் கூட்டு ஆதரவின் காரணத்தாலேயே தாங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளீர்கள். அவ்விதமானதொரு தெரிவு உங்களது பலத்தை அதிகரிக்கச் செய்தள்ளது எனக் கருதுகின்றேன்.
சமீபத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் தங்களது உரையின்போது வடக்கிலும் தெற்கிலும் வாழும் மக்களின் மனங்களை இணைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டதை நான் மனப்பூர்வமாக வரவேற்கின்றேன். கடந்த ஜனாதிபதி தேர்தலில் சுபீட்சமான நல்லாட்சிக்காகவே எமது கட்சி ஆதரவளித்ததுடன் எமது மக்களும் தங்களது வாக்குகளை உங்களுக்கு அளித்துள்ளார்கள்.
நீண்ட காலமாக வடக்கு கிழக்கு மக்கள் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களினால் ஒதுக்கப்பட்டவர்களாக காணப்படுகின்றார்கள். கடந்த காலத்தில் சர்வாதிகாரம் பின்பற்றப்பட்டமை அவதானிக்க கூடியதாகவிருந்தது. அந்த நிலைமை மாறவேண்டும். ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்படும் கருமங்கள் சுதந்திரமாகவும் ஜனநாயகத்தன்மையாகவும் அமையவேண்டும் என்பதற்காக ஆதரவை வழங்கியுள்ளோம்.
கடந்த காலங்களில் நீதிமன்றங்கள் குறிப்பாக மேல் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் போன்றவற்றுக்கு மதிப்பளிக்கப்படவில்லை. சர்வாதிகார முறையினூடாக சுதந்திரம் பறிக்கப்பட்டிருந்தது. மக்கள் ஜனநாயகத்தை இழந்திருந்தார்கள்.
ஜனநாயகம் என்பது பெறுமதியானது. எல்லோராலும் எல்லா நிலையிலும் மதிக்கப்படவேண்டும். அப்போதுதான் முழுமையான ஆட்சியைப் பெறமுடியும்.
ஒருமித்த நாட்டில் ஒரு நிலைத்த நீடித்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வை வேண்டியே தமிழ் மக்கள் நீண்டகாலத்திற்குப் பின் ஜனநாயகத்திற்கு தமது பரிபூரண ஆதரவை வழங்கியுள்ளார்கள். அதில் அதிக விசுவாசமுடையவர்களாகவும் காணப்படுகின்றார்கள். அவ்வாறான விசுவாசத்தை அரசாங்கத்திடமிருந்தும் எதிர்பார்க்கின்றனர்.
திருகோணமலை இந்து மக்கள் அதிகமாக வாழும் புனித பூமியாகும். இங்கு திருக்கோணஸ்வரர் எனப்படும் தட்சின கையிலா பதியும் சக்திமிக்க காளி அம்மன் ஆலமும், வில்லூன்றிகந்தசுவாமி எனப்படும் சிறப்பு மிக்க முருகன் ஆலமும் காணப்படுகின்றன. இவ்வரலாற்று பெருமை மிக்க ஆலயங்களுக்கு அனைத்து மக்களும் இன மொழி மத பேதமின்றி வருகைதந்து வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். அவ்வாறிருக்கையில் உங்களுடைய நல்லாட்சிக்கும் எல்லாம் வல்ல மேற்படி தெய்வங்கள் அருள்புரிய வேண்டும் என பிரார்த்திதுக்கொள்கின்றேன் என்றார்.
0 Comments