உலக கோப்பை கிரிக்கெட்டில் வருகிற 15–ந்தேதியுடன் லீக் சுற்று முடிகிறது. ‘ஏ’ பிரிவில் கால்இறுதி அணிகள் உறுதியாகி விட்ட நிலையில், ‘பி’ பிரிவில் இந்தியாவை தவிர மற்ற மூன்று அணிகள் எவை என்பதை முழுமையாக அறிய கடைசி லீக் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது. என்றாலும் கால்இறுதியில் யார்–யார் மோத வாய்ப்பிருப்பது என்பதை கிரிக்கெட் நிபுணர்கள் கணித்து வெளியிட்டுள்ளனர்.
தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தங்களது கடைசி லீக்கில் குட்டி அணியான ஐக்கிய அரபு எமிரேட்சை சாய்த்து விடும். இதே போல் அயர்லாந்துக்கு எதிரான இறுதி லீக்கில் பாகிஸ்தான் வெற்றி பெறவே பிரகாசமான வாய்ப்புள்ளது. இப்படி நடந்தால் அயர்லாந்து வெளியேறி விடும். தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தானுடன், ரன்ரேட் அடிப்படையில் வெஸ்ட் இண்டீசும் உள்ளே நுழைந்து விடும். இதே போல் ‘ஏ’ பிரிவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் தங்களது கடைசி லீக்கில் சின்ன அணிகளை வென்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட கணிப்புபடி முடிவுகள் அமைந்தால் கால்இறுதியில் இவ்வாறு மோத வேண்டி இருக்கலாம்.
மார்ச்: 18 இலங்கை–தென்ஆப்பிரிக்கா, சிட்னி
மார்ச்: 19 இந்தியா–வங்காளதேசம், மெல்போர்ன்
மார்ச்.20 ஆஸ்திரேலியா–பாகிஸ்தான், அடிலெய்டு
மார்ச்.21 நியூசிலாந்து–வெஸ்ட் இண்டீஸ், வெலிங்டன்
ஒரு வேளை கடைசி லீக்கில் (மார்ச் 15–ந்தேதி) அயர்லாந்து அணி பாகிஸ்தானை வதைத்து விட்டால், இந்த பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் அல்லது பாகிஸ்தான் ஆகிய அணிகளில் ஒன்று வெளியேற வேண்டி இருக்கும். சொந்த மண்ணில் விளையாடுவதற்கு ஏதுவான வகையில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி மைதானங்களை ஐ.சி.சி. மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments