மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுத்திய வடுக்களின் சாட்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள் பலர் தங்களின் நாளாந்த வாழ்வாதாரத்திற்கும், மருத்துவ செலவுகளுக்கும் திண்டாடிக் கொண்டிருக்கும் அவலங்கள் இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
உடலால் ஊனமுற்ற இந்த மனிதர்கள் இன்னமும் உள்ளத்தினால் ஊனமடையவில்லை தமிழ் மக்களுக்காகவும், தங்களது குடும்பங்களுக்காகவும் தமது அங்கங்களை தியாகம் செய்த இந்த உத்தமர்கள் தங்களது நாளாந்த வாழ்வாதாரத்திற்காக நம்பிக்கையுடன் எழுந்து நிற்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பட்டிப்பளை மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் வாழ்ந்துவரும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் அவலக் குரல்கள் உலகத்தின் மனசாட்சிகளை தட்டிப்பார்க்கவில்லை என்ற ஆதங்கத்தின் எழுச்சியாக “உதய ஒளி” மாற்றுத்திறனாளிகள் அமைப்பு என்ற ஒன்றை உருவாக்கி அதனுடாக தங்களின் மனவேதனைகளையும், அவலங்களையும் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தி தங்களுக்கான உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு வருகின்றனர்.
ஆனால் தங்களின் கோரிக்கைகளை ஒரு பிரதேச செயலக மட்டத்திற்கு கூட கொண்டு சென்று நிறைவேற்ற முடியாமல் உள்ளதாக குறித்த மாற்று திறனாளிகள் அமைப்புக்கான தலைவர் கி.பாக்கியராசா அவர்கள் தனது வேதனையை தெரிவித்தார்.
பட்டிப்பளை மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் யுத்தம், இயற்கை அனர்த்தம் மற்றும் பிறப்பு காரணமாக அங்கவீனமடைந்தவர்கள் மொத்தமாக 510 மாற்றுத்திறனாளிகள் வாழ்ந்துவருகின்றனர். இவர்களில் பலர் குடும்ப தலைவர்களாக இருப்பதால் இவர்களின் குடும்ப வாழ்க்கை வறுமையின் கொடுமைகளை சுமந்தபடியே சென்று கொண்டிருக்கின்றது என்கின்றார் தனது கால் ஒன்றை இழந்து தவிக்கும் பெண் ஒருவர்.
உதய ஒளி மாற்று திறனாளிகள் அமைப்பின் தலைவர் அவர்கள் தங்களது துன்பங்கள் பற்றியும், தங்களது கோரிக்கைகள் பற்றியும் எங்களுடன் பின்வரும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் போராலும், இயற்கையாலும் பாதிக்கப்பட்டு அங்கங்களை முற்றாக இழந்தும், மனநலம் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் எங்களது அமைப்பில் 450 இற்கு மேற்பட்டவர்கள் அங்கத்தவர்களாகவுள்ளனர். எமது பிரதேசம் போரினால் முற்றாக அழிவடைந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டமையினால் இன்று நாங்கள் வாழ்வாதாரத்திற்காக மற்றவர்களிடம் கையேந்தும் நிலையில் உள்ளோம்.
எங்களுக்கு நாளாந்த வருமானம் இல்லை, சொந்தமாக தொழில் இல்லை, கூலித்தொழில் கூட செய்யமுடியாத அளவுக்கு எங்களது அங்கங்களை கடவுள் பறித்துவிட்டான் இதனால் நாங்கள் பல்வேறுபட்ட மன அழுத்தங்களுக்கு உள்ளாகி உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
எங்களுக்கு அரசாங்கத்தாலும் வாழ்வாதார உதவிகள் கிடைப்பதில்லை எத்தனையோ தொண்டு நிறுவனங்கள் மூலை முடுக்கெல்லாம் நிறைந்து காணப்பட்டாலும் அங்கங்களை இழந்து நாளாந்த வாழ்வாதாரத்திற்காக அவதிப்படும் எம்மைப்போன்ற அமைப்புக்களுக்கு உதவுவதற்கு முன்வரவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றார்.
எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் செயற்படும் எமது அமைப்புக்கு ஒரு கட்டிடமோ, தளபாடங்களோ இல்லாது சில பொதுக்கட்டிடங்களிலேயே கூட்டங்களை நடாத்திவருகின்றோம். அதில் கலந்து கொள்ளும் எமது அங்கவீனர்களுக்கு ஆலோசனைகளையும், புத்திமதிகளையும், நம்பிக்கையையும் தவிர எங்களால் எதையும் கொடுக்க முடிவதில்லை.
அரச காணியொன்றை பெற தகுதியற்றவர்களா நாங்கள்?
கடந்த சில வருடங்களாக எமது அமைப்புக்கான ஒன்று கூடல் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்காக அரச காணியொன்றை பெறுவதற்கு பல வழிகளிலும் முயற்சித்தும் எங்களால் முடியாமல் போய்விட்டது.
எமது அமைப்புக்கான கட்டிடம் ஒன்றை கட்டுவதற்கு நிறுவனமொன்று முன்வந்துள்ள நிலையில் அதற்கான அரசகாணி யொன்றை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வழங்காத காரணத்தினால் அது கைவிடப்படும் நிலையில் உள்ளது.
அத்தோடு எமது அமைப்புக்கு பிரதேச செயலகத்தினால் அண்மையில் வழங்கப்பட்ட பொதுக்கட்டிடம் எந்தவித சுற்றுவேலியும் இன்றி மாடுகள் தங்கும் மடமாகவுள்ளதால் அதனை திருத்தி அமைக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
மூவாயிரம் ரூபாய் கொடுப்பனவு எல்லோருக்கும் கிடைப்பதில்லை
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் மூவாயிரம் ரூபாய் கொடுப்பனவு குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமே வழங்கப்பட்டுவருகின்றது. பிரதேசத்தில் உள்ள எல்லா மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த மூவாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க மறுத்து வருகின்றனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் நாங்கள் கேட்டபோது குறித்த கொடுப்பனவு சமூர்த்தி உதவி பெறும் நபர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுவதாகவும். தற்போது கொடுப்பனவை பெற்றுக்கொண்டிருக்கும் நபர் இறந்தால்தான் அந்த உதவியை மற்றவர்களுக்கு மாற்றி கொடுக்கமுடியும் எனக் கூறுகின்றனர்.
எனவே எங்களையும் இந்த மண்ணில் ஒரு மனிதனாக மதித்து எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு எமது சங்கத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்கு முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
மட்டக்களப்பு வாழ் சமூகம் இவர்களுக்காக என்ன செய்யப்போகின்றது? மாற்றுத்திறனாளிகளை எமது சமூகம் புறக்கணிக்கின்றதா? என்ற கேள்விகளை தாங்கிநிற்கும் இவர்கள் உளவியல் ரீதியாக மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
குறிப்பாக அரச நிர்வாகங்கள் மீது இவர்கள் மிகுந்த வெறுப்படைந்துள்ளனர். “தங்களை இந்த சமூகத்தில் விசேட தேவையுடையவர்களாக அடையாளப்படுத்தியுள்ள அரசாங்கமும் அரசநிர்வாகங்களும் தங்களை அரவணைத்து செய்படுவதோ அல்லது தங்களின் கோரிக்கைகளை உள்வாங்கி அதற்காக நடவடிக்கை எடுப்பதே இல்லை என்று குற்றம்சாட்டும் இவர்கள் தங்களின் கோரிக்கைகளை அரச அதிகாரிகள் சாக்குபோக்கு சொல்லி கிடப்பில் போட்டுவிடுகின்றனர் எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.
இவர்கள் விசேட தேவையுடையவர்கள் என்பது உண்மையாக இருந்தால் அவர்களுக்கான விசேட தேவைகளை செய்து கொடுக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.
“எமக்காக அங்கங்களை இழந்து துன்பப்படும் இவர்களையும் திரும்பி பாருங்கள் என்பதே எமது வேண்டுகோள்”
0 Comments