அண்மையிலே இதே ஊடகத்தில் வெளியான செய்தியின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தினை மையப்படுத்தி கல்விமான்களினாலும் புத்திஜீவிகளினாலும் புதிதாக ஒரு கட்சி உருவாக்கப்படப்போவதாக செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு முழுமையாக வெளிநாட்டு சக்தி பின்புலமாக உள்ளதாக கூறப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அவ்வாறான படித்த புத்திஜீவிகள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டால் மட்டக்களப்பில் கூட்டமைப்பின் அரசியலினை மேலும் பலப்படுத்தாலாம். மட்டக்களப்பில் உண்மையிலே படித்த அரசியல்வாதிகளின் எண்ணிக்கை குறைவுதான். ஒரு தீர்க்கமான முடிவினை தன்னிச்சையாக எடுக்கமுடியாத நிலை உள்ளமையும் காணக்கூடியதாக உள்ளது.
தற்போது தமிழ் இளைஞர்களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான தொடர்பு அதிகரித்து கொண்டே செல்கின்றது. இளைஞர்களிடையே தமிழ் தேசியத்தின் மேல் சில விருப்பு வெறுப்புகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அதற்கு அரசாங்கமும் காரணமாக இருந்தமை யாவரும் அறிந்த விடயம். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஏதாவது உதவி செய்தாலோ அல்லது அவர்களுக்கு சார்பாக செயற்பட்டாலோ உடனடியாக புலனாய்வுப்பிரிவினரின் விசாரணைகளுக்கு உட்படுத்தப் படுவதனால் இளைஞர் மத்தியில் பீதியினை ஏற்படுத்தியிருந்தமையும் ஒரு காரணமாகும். குறிப்பாக கூட்டமைப்பு அரசியல் வாதிகள் எந்தவொரு நிகழ்வுகளிலும் பங்கெடுக்க முடியாத நிலை காணப்பட்டது. பாடசாலை நிகழ்வுகளில் ஆளும் கட்சி அரசியல் வாதிகள் பங்கெடுக்கின்றனர். அதே வேளை கூட்டமைப்பு அரசியல் வாதிகள் பங்குபெறுவதற்கு அனுமதிகள் மறுக்கப்பட்டது. இவையனைத்தும் தமிழ் என்பதையே இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தமை அனைவரும் அறிந்த விடயம்.
தற்போது மட்டக்களப்பில் உள்ள அரசியல் வாதிகள் தங்களின் இருப்பை மாத்திரம் தக்க வைத்துக்கொள்வதற்கான தந்திரோபாயங்களை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்வரும் தேர்தல்களில் இளைஞர்களை மற்றும் படித்த புத்திஜீவிகளினை நியமித்து எதிர்காலத்தில் மட்டக்களப்பு அரசியலுக்கு ஒரு தனித்துவத்தினை பெற வேண்டும் என்பதே மக்களின் அபிலாசையாக உள்ளது. தற்போதுள்ள அரசியல் வாதிகளை நீக்கிவிட்டு மேற்குறிட்ட தகுதிவாய்ந்த அரசியர் வாதிகளை நியமிக்க வேண்டும் என்பதே மட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.
மட்டு தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய சூழநிலையில் உள்ளோம். கடந்த மாகாண சபை தேர்தலில் நாம் சிந்தித்து வாக்களித்திருந்தோமாக இருந்தால் கிழக்கு மாகாண சபை தமிழ் தேசிய கூட்டமைப்பினரே ஆட்சி நடாத்தியிருப்பார்கள். அதைவிடுத்து இன்று முஸ்லிம்களின் கைகளில் ஆட்சியினை கொடுத்து விட்டு வீராப்பு பேசுகின்றோம். அது போன்றுதான் பாராளுமன்ற தேர்தலும் நான்கு ஆசனங்களை பெறவேண்டிய கூட்டமைப்பு சென்ற தேர்தலில் மூன்று ஆசனங்களை பெற்றிருந்தோம். இந்நிலை தொடருமாக இருந்தால் இரண்டு ஆசனங்களை மாத்திரமே பெறக்கூடிய துர்ப்பாக்கியநிலை ஏற்படும். சகோதர இனம் குளிர்காய்வதற்கு தருணம் காத்திருக்கின்றனர். ஆகவே நாம் இதனை நிறுத்துவதாக இருந்தால் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.
சென்ற கிழக்கு மாகாணசபை தேர்தலிலே மட்டக்களப்பிலே பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் பழுகாமம் எனும் கிராமத்தில் இரண்டு வேட்பாளர்களை நியமித்தது அரசியல் சாணக்கியமா? எனவே இவ்வாறாக சிந்திக்கும் அரசியல் தலைமைகளை நாம் இனம்கண்டு அவர்களை கூட்டமைப்பில் இருந்து அகற்ற வேண்டும்.
எதிர்காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அடுத்த பிரதிநிதிகள் யாரென்று கேட்டால்? அது கேள்விக்குறியாகவே உள்ளது. இனியாவது இன்னுமொரு கட்சி என்பதை விடுத்து எமது தமிழ் தேசிய உணர்வுடன் அனைவரும் செயற்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்பதே மட்டு மக்களின் ஏகோபித்த குரலாகும்.


0 Comments