கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவை விளக்கமறியலில் வைப்பதா இல்லையா என்பது குறித்த அறிவிப்பு வைத்திய அறிக்கையை பரிசீலித்த பின்னரே விடுக்கப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சசி வீரவன்சவை கைது செய்து தற்போது மாலபே பகுதி தனியார் வைத்தியசாலை ஒன்றில் பொலிஸ் காவலில் வைத்துள்ளதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
சசி வீரவன்சவை விளக்கமறியலில் வைக்குமாறு இரகசிய பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். அக்கோரிக்கையை பரிசீலித்த நீதவான் கிஹான் பலபிட்டிய மேற்கண்டவாறு அறிவிப்பு தெரிவித்துள்ளார்.
இதேவேளை
முனாள் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
இன்றைய தினம் காலை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சரிடம் நீண்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இரண்டு சட்டத்தரணிகளுடன் விமல் வீரவன்ச தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்கு மூலமொன்றை அளித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விமல் வீரவன்ச எதற்காக அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுகின்றார் என்பதனை தற்போதைக்கு ஊடகங்களுக்கு அம்பலப்படுத்த முடியாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவை காவல்துறையினர் நேற்று கைது செய்திருந்தனர்.
குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
ராஜதந்திர மற்றும் சாதாரண கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்காக போலியான தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்ட போலி ஆவணங்களை வழங்கியதாக சசி வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட சசி வீரவன்ச இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.


0 Comments