புதிய முறையின் கீழ் தேர்தல் நடத்துவதனால் எமக்கு 3 மாத கால அவகாசம் தேவை என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 2016 ஏப்ரல் மாதமே நிறைவடைகிற போதும் ஜனாதிபதிக்கு எந்த நிமிடமும் தேர்தல் நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய தேர்தல் முறைமை குறித்து சகல தரப்பினருடனும் ஆராய்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் கட்அவுட் சுவரொட்டி இல்லாத தேர்தல் நடப்பதையேதான் விரும்புவதாகவும் கூறினார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
தினேஷ் குணவர்த்தன தலைமையிலான குழு தயாரித்த புதிய தேர்தல் சட்ட முறைமையை நான் இதுவரை காணவில்லை. அதில் கலப்பு முறை குறித்து பிரேரிக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன்.
தேர்தல் சட்டத்தை மாற்றும் அதிகாரம் எமக்கு கிடையாது. எம்மிடம் வினவினால் தேவையான யோசனைகள் வழங்க முடியும். எல்லை நிர்ணய ஆணைக் குழுவினூடாக எல்லை அமைத்து பாராளுமன்றத்தினூடாக சட்டம் நிறைவேற்றப் பட வேண்டும்.
கடைசியாக நியமித்த எல்லை நிர்ணய ஆணைக்குழு, குலம், மதம் மற்றும் இன அடிப்படையில் எல்லைகள் பிரிக்கத் தேவையில்லை என பரிந்துரை செய்துள்ளது.
தேர்தல் சட்ட திருத்தத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரம் தேர்தல் திணைக்களத்துக்கு வழங்கப்படுவதை வரவேற்கிறோம். எல்லை நிர்ணய சட்டத்தின் படி 36 ஆசனங்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 160 ஆசனங்கள் நாடு பூராவுமுள்ள பதிவு செய்யப்பட்ட வாக்காளர் தொகையின் பிரகாரம் மாவட்ட மட்டத்தில் பிரித்து வழங்கப்படுகிறது.
ஒவ்வொருவரிடமும் இந்த மாற்றம் முன்னெடுக்கப்படுகிறது. இதன்படி 2013 உடன் ஒப்பிடுகையில் மாத்தறை மாவட்டத்திற்கான ஆசன தொகை 7 இல் இருந்து 8 ஆகவும் யாழ்ப்பாணத்துக்கான ஆசன தொகை 6 இல் இருந்து 7 ஆகவும் அதிகரித்துள்ளன. பதுளை மற்றும் மொனராகல மாவட்டங்களுக்கான ஆசன தொகை தலா ஒன்றினால் குறைந்துள்ளது.
ஏனைய மாவட்டங்களில் எதுவித மாற்றமும் கிடையாது. வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளடக்கப்படாத சுமார் 10 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களை குறைநிரப்பு வாக்காளர் பட்டியல் (Supplementary list) அமைத்து உள்வாங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ள அரச உத்தியோகத்தர்கள், தேர்தல் கண்காணிப்பு உத்தியோகத்தர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோருக்கு வேறு இடத்தில் வாக்களிக்க அனுமதி வழங்குவது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் இது குறித்து முடிவு செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
0 Comments