ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடந்த இரண்டு நாட்களாக நேரடிப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. முன்னதாக, ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான தீர்மானத்தை அறிவிப்பதில் இந்தக் கட்சிகள் தாமதம் அடைந்திருந்த படியால், வடக்கு கிழக்கின் தமிழ் - முஸ்லிம் பிரதேசங்களில் தேர்தல் பிரசாரங்களில் தேக்க நிலையே காணப்பட்டது.
|
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான பிரசாரங்களே கடந்த மூன்று வாரங்களாக அந்தப் பகுதிகளில் நடைபெற்று வந்தன. அரச மானியங்களையும் உதவித் திட்டங்களையும் பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்வுகள் கூட ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளினால் தேர்தல் பிரசாரத்திற்கான உத்தியாக பயன்படுத்தப்பட்டு வந்ததாக விமர்சனங்கள் இருந்தன.
முக்கிய தமிழ், முஸ்லிம் கட்சிகள் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவது என்று எடுத்த தீர்மானத்தைத் தொடர்ந்தே கிழக்கு மாகாணத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது. கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் வாக்காளர்களை பொறுத்தவரையில் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களிடம் காணப்படுகின்றது. ஆனால் கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுடன் நோக்கும் போது, கிழக்கில் இம்முறை தேர்தல் பிரசாரத்தில் ஒரு மந்த நிலையையே தங்களால் காணமுடிவதாக பலரும் பிபிசியிடம் கூறியுள்ளனர்.
![]() |
0 Comments