கிழக்கு மாகாணத்திலுள்ள கல்வி வலயங்களில் சில நடைமுறைகள் வலயத்திற்கு வலயம் வேறுபட்ட முறைகளில் பின்பற்றப்பட்டு வருவதாக ஆசிரியர்கள் முறையிட்டு வருகின்றனர். இதனால் ஆசிரியர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படுவதுடன் பாதிக்கப்பட்டும் வருகிறார்கள். எனவே புதிய ஆட்சியில் அவற்றை சீர்படுத்துமாறு வேண்டுகின்றோம்.
என கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாமிடம் இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்விடயம் குறித்து கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆசிரியர்களுக்கான சம்பள உயர்ச்சி வழங்குவதற்கு நிரப்பப்படும் விண்ணப்பப் படிவங்கள் வலயத்திற்கு வலயம் வேறுபட்டுள்ளன. சில வலயங்களில் உழைத்துப்பெறும் இச் சம்பள உயர்ச்சியைப் பெற பலரது சிபாரிசையும் அங்கீகாரத்தையும் பெற வேண்டியிருப்பதாக முறையிடப்பட்டுள்ளது. பல வலயங்களில் ஆசிரியர்கள் தமது சம்பள உயர்ச்சியை கேட்டு பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உள்ளது. ஆசிரியர்கள் தமது சம்பள நிலுவைகளைப் பெறுவதென்பது முயற்கொம்பாகவுள்ளது. இதனைப் பெற அலுவலகம் நோக்கி அலைய வேண்டியுள்ளது. இதனால் பல மாதங்கள் தாமதமாகி வருகிறது.
ஒரு சில இடங்களில் கையூட்டு வழங்க வேண்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது. வலயத்திற்குள்ளான வலயத்திற்கு வெளியேயான இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதில் இன்னமும் வேறுபாடு இருக்கின்றது.
பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் ஏற்படும் போது சில வலயங்களில் விண்ணப்பம் கோரப்பட்டு தகுதியானவருக்கு வழங்கப்படுகிறது. இன்னும் சில வலயங்களில் விண்ணப்பமே கோரப்படாமல் தகுதியற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட ஒரே வலயத்தினுள்ளும் இம்முரண்பாடு உள்ளது. கிழக்கிலுள்ள 17 கல்வி வலயங்களில் சம்மாந்துறை வலயத்தில் மட்டும் அதிபர் வெற்றிடத்தை நிரப்ப விசேட விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இது முறையற்ற செயற்பாடாகும். உதவிக்கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரிய ஆலோசகர் நியமனங்களின் போதும் சீரான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.
பொதுமக்கள் சந்திப்பு தினமான புதன்கிழமைகளில் வலயங்களில் அதிகாரிகளைச் சந்திக்கச் செல்கின்ற போது அவர்கள் அன்றைய தினம் அலுவலகக்கூட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதால் மக்களுக்கோ ஆசிரியர்களுக்கோ உரியவர்களைச் சந்திக்க முடிவதில்லை. சில வலயங்களில் இது நடைமுறையிலுள்ளது. கிழக்கில் சகல வலயங்களிலும் ஒரே நாளை அலுவலக நாளாக பிரகடனப்படுத்த வேண்டும். சிலவேளை மாகாண பணிமனைகளில் கூட இந்நிலை நிலவுகிறது. அவை எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும்.
இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் ஒரு ஸ்தானத்தில் 5 வருடங்களுக்கு பணியாற்றலாம் என்பது நியதி. ஆனால் ஒரு அதிகாரி மட்டும் 10 வருடங்கள் கடந்தும் ஒரே வலயத்தில் கடமையாற்றுவதை அனுமதிக்கலாமா? மாணவர்களுக்கான போட்டிகள் தொடர்பில் தொடர்ந்து பிரச்சினைகள் எழுந்த வண்ணமே உள்ளன. பல வலயங்களில் போட்டி நடைபெறும் தினம், இடம் என்பன முன் கூட்டியே அறிவிக்கப்படுவதில்லை. முதல்நாளிரவு அறிவிக்கப்படும் நடைமுறை மாறி வருகிறது. மாகாண தேசிய போட்டிகளில் வெற்றியீட்டும் மாணவர்களுக்கான சான்றிதழ்களை உரிய காலத்தில் பெற்றுக் கொடுக்க வேண்டும். பெற்றோர் தலையிட்டு வருடத்தின் பின் பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலையுமுள்ளது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் 2014 ஆம் ஆண்டுக்கான வருடாந்த வலய மற்றும் மாகாணங்களுக்கிடையிலான ஆசிரியர் இடமாற்றத்திற்கான விண்ணப்பங்களை கல்வியமைச்சின் 2007.20 ஆம் இலக்க சுற்று நிருபத்திற்கமைவாக தேவையான ஆசிரியர்களிடமிருந்து கோரியுள்ளது. அதனை சகல வலயத்திலும் சீராக நீதியாக அமுல்படுத்த உதவ வேண்டும். புதிய வருடத்தில் புதிய ஆட்சியிலாவது இவற்றைச் சீர்செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments