Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை தீர்மானிக்கவில்லை. எனினும் ஜனாதிபதித் தேர்தலில் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை எடுக்கும் தீர்மானத்திற்கு கட்டுப்படுவோம் என அக்கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டமொன்று நேற்றிரவு கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.  சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
எனினும் இந்த சந்திப்பில் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் சேகுதாவவூத் கலந்துகொள்ளவில்லை. இதன்போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக கட்சித் தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு ஆதரவாக கையுயர்த்துமாறு இரண்டு தடவைகள் கட்சித் தலைவர் கோரிய போது, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இரண்டு தடவைகள் கையுயர்த்தியுள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கூற நீங்கள் தயாரா என கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் கேட்டதற்கு, ஆம் என அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“எமக்கு வாக்களித்த மக்கள் மைத்திரிபால சிறிசேனவையே ஆதரிக்குமாறு நாடளாவிய ரீதியில் தெரிவித்து வருகின்றனர். இதனால் நாம் மக்களின் தீர்மானத்திற்கு கட்டுப்பட வேண்டும் என எதிர்;க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக இதன்போது தெரிவித்தனர்.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தினைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரீ.ஹசன் அலி, எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் பைசால் காசீம் ஆகியோர் மக்களின் தீர்மானத்திற்கு கட்சி கட்டுப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும் என மக்கள் தெரிவிப்பதற்கு நாமே காரணம் என குறித்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் இதன்போது தெரிவித்தனர்.
இதனால் மக்களின் தீர்ப்பிற்கு நாம் கட்டுப்பட வேண்டும். அடுத்த தேர்தல்களில் ஏனைய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவோம் என குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

Post a Comment

0 Comments