Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனையில் முஸ்லிம் காங்கிரசுடன் பேசுவதை எதிர்ப்பது முட்டாள்தனமானது! – சுமந்திரன் கருத்து.

கல்முனையில் முஸ்லிம் காங்கிரசுடன் பேசவேண்டாம் என்று கூறுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்களுடன் பேசுவது தொடர்பாக எங்களுக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் அறிவில்லாத - சட்டத்திற்கு அப்பாற்பட்ட அம்சங்களாகும். மக்களுக்குத் தலைமை தாங்குகின்றவர்கள் இவ்வாறான செயலில் ஈடுபடுவது கவலைக்குரிய விடயம்.
  
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் கல்முனையில் பேச வேண்டாம், வேறு எங்காவது சென்று பேசுங்கள் என்று கூறுவதில் எவ்விதமான அர்த்தமும் இல்லை. ஏன் நாங்கள் ஒளித்துப் பேசவேண்டும்? மக்களுக்கு அங்கலாய்ப்புகள், மன உளைச்சல்கள் இருக்கலாம். எல்லாவற்றிக்கும் மேலாக மக்களுக்கு வழிகாட்டக்கூடிய தலைவர்களாகிய நீங்கள் இவ்வாறு செயற்பட்டால் எங்களது மக்களுக்கு எப்போதும் விடிவு வராது. பேசப் பட வேண்டிய விடயங்கள் எங்காவது பேசப்பட்டேயாக வேண்டும். எங்கு நின்றாவது நிச்சயமாகப் பேசுவோம். இதற்காக நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இந்த மாவட்டத்திலே சிங்கள மக்களை விட முஸ்லிம் மக்கள் எங்களை அடிமைப்படுத்துகின்றார்கள் என்பதனை திரும்பத்திரும்ப அம்பாறை மாவட்ட கூட்டமைப்பு உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். தேசியவாதம் என்பது ஒரு புதிய பேரினவாத அடக்குமுறை. இந்த நாட்டிலே இருக்கின்ற பெரிய பிரச்சினை பேரினவாதப் பிரச்சினை. இதனை மாற்றியமைக்க வேண்டும். ஒரு சமூகம் பெரும்பான்மையாக இருக்கின்றபோது அந்தப் பெரும்பான்மை, அரசியலுக்கு இடையூறாக இருப்பதனால்தான் பேரினவாதப் பிரச்சினை உருவாகின்றது.
இவ்வாறான காரணங்களினால்தான் நாங்கள் பிரதேசங்களுக்கு அதிகாரப்பகிர்வை கேட்கின்றோம். வடக்கு, கிழக்குப் பிரதேசம் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற பிரதேசம். அந்த பிரதேசத்திற்கு ஆட்சி அதிகாரங்கள் பகிரப்பட்டால் அந்தப் பிரதேசத்திலே ஜனநாயகமாக வாக்களித்து, பெரும்பான்மையானவர்களைத் தெரிவு செய்கின்றபோது அங்கு பெரும்பான்மையாக வாழ்கின்ற தமிழ் மக்கள் தங்களது தலைவிதியை தாங்களே தீர்மானிப்பார்கள். இதனால்தான் அன்று தொடக்கம் இன்று வரை இவ்வாறான ஆட்சிமுறை மாற்றப்பட வேண்டும் என்று கேட்கின்றோம்.
ஆனால், இந்த நாட்டில் பெரும்பான்மை இனத்தவரால் பேரினவாதம் தலைவிரித்தாடுகின்றது என்று சிறுபான்மையினர் முறையிடுவார்கள். அப்படி முறையிடுபவர்கள் தாங்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற பிரதேசங்களிலே பேரினவாதிகளாகச் செயற்படுவதுண்டு. நாங்கள் கடந்த காலங்களிலே இலங்கை அரசோடு, சிங்கள இன மக்களோடு பேசுகின்றபோது இந்தப் பேரினவாதங்களைப் பற்றி பேசினால் அவர்கள் சில இடங்களை சுட்டிக்காட்டுவார்கள். நீங்கள் இப்படிச் சொல்கின்றீர் கள். நாங்கள் சிறுபான்மையாக வாழுகின்ற பிரதேசத்தில் நீங்கள் எங்களை அடக்கி ஒடுக்குகிறீர்கள் என்று சுட்டிக் காட்டுவார்கள். அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தளவில் நாட்டிலே வாழுகின்ற சிறுபான்மையினத்தவராகிய முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களும் இருக்கின்ற அதிகாரங்களைப் பகிரவேண்டும்.
இதற்காக இங்கிருக்கும் பிரச்சினைகளை சாதாரணமாக பார்க்கவில்லை. இவை பாரதூரமானவை. இரண்டு பகுதியினருக்கும் அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கின்றன. இதில் யாருக்கு கூடுதலான கொடுமை நடந்துள்ளது யாருக்கு குறைவான கொடுமை நடந்துள்ளது என்பதை விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அப்படியான சூழ்நிலையிலிலும் எழுகின்ற பிரச்சினைகள் நியாயமாகத் தீர்க்கப்பட வேண்டும். இவை பெரும்பான்மை இனத்தினரால் தீர்க்கப்பட முடியாதவை. பெரும்பான்மையினரால் தீர்க்கப்படவேண்டிய தில்லை. இது பேசித்தீர்க்கப்படக்கூடிய தொன்று.
இலங்கை அரசோடு நாங்கள் பேசுகின்றோம். எவ்வளவுதான் கொடுமைகள் செய்தாலும், எவ்வளவுதான் அடக்கு முறைகள் செய்தாலும், நாங்கள் அவர்களோடு பேசித்தான் ஆகவேண்டும். தமிழ் மக்கள் சார்பாக பேசுவதற்குத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்துள்ளீர்கள். ஆகவே, கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் சிங்களத் தரப்புடன் பேசினாலும் முஸ்லிம் சமூகத்தோடு பேசினாலும் தமிழ் மக்கள் சார்பாகத்தான் பேசுவோம். இதில் எந்தவிதமான ஐயப்பாட்டிற்கும் இடம் கிடையாது. இது போன்றுதான் முஸ்லிம் சமூகத்துடன் கல்முனையில் பேசியிருக்கின்றோம். அது வெற்றியளிக்காமல் போய் இருக்கலாம்.
ஒரு சுற்று பேச்சில் அனைத்தும் தீர்ந்துவிடும் என நாங்கள் நினைத்துவிட முடியாது. ஒரு பேச்சு வெற்றிகரமாக முடியவில்லை என்பதற்காக இவர்களுடன் இனி பேசமுடியாது என நாங்கள் தீர்மானிக்கவும் முடியாது. எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் கல்முனையில் பேசக்கூடாது. வேறு எங்காவது பேசுங்கள் எனக் கூறுமளவுக்கு நாங்கள் முட்டாள்தனமாகவும் செயற்படக்கூடாது. கல்முனையில் பேசுதற்கு மக்கள் தடையாக இருந்தால் அவற்றைக் கதைத்து மக்களின் மன உடைவுகளை சரிசெய்ய வேண்டியவர்கள் கல்முனையிலுள்ள கூட்டமைப்பு உறுப்பினர்கள்" என்றார்.

Post a Comment

0 Comments