புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப் பணிமன்றத்தின் ஏற்பாட்டில் அவரது, 36 வது நினைவுதின நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (02) காலை 9 மணிக்கு மண்டூர் இராமகிருஷ்ண கலாசார மண்டபத்தில் நினைவுப் பணிமன்றத் தலைவர் கலாநிதி சி.சந்திரசேகரத்தின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
ஒவ்வொரு வருடமும் புலவர்மணியின் சிரார்த்த தினமாகிய நவம்பர் 2ஆம் திகதியை முன்னிட்டு புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப் பணிமன்றம் நினைவு தின நிகழ்வை நடாத்தி வருகின்றது.
இந்நிகழ்வு பெரும்பாலும் மட்டக்களப்பு நகரை மையப்படுத்தியே இடம்பெற்று வந்தது. இந்த வருடம் புலவர்மணியின் 36 வது நினைவுதின நிகழ்வை புலவர்மணியின் பிறந்த ஊராகிய மண்டூரில் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப் பணிமன்றமும் மண்டூர் கலை இலக்கிய அவையும் இணைந்து நடத்துகிறது.
இந்த நிகழ்வில் 'ஈழத்து நிவீன கவிதை உருவாக்கத்தில் மண்டூர்க் கவிஞர்களின் வகிபங்கு' என்ற தலைப்பிலான நினைவுப் பேருரையை கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் செ. யோகராசா ஆற்றவுள்ளார். சிறப்பு அதிதிகளாக எழுத்தாளர் மண்டூர் அசோகா, உதவிக் கல்விப் பணிப்பாளர் மு. விமலநாதன், கவிஞர் மாணிக்கசபாபதி, கலாநிதி ஏ.செல்வேந்திரன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
மண்டூரிலுள்ள புலவர்மணியின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தலுடன் நிகழ:வுகள் ஆரம்பமாகும் இந் நிகழ்வில், தொடக்கவுரையை மண்டூர் கலை இலக்கிய அவையின் தலைவர் கவிஞர் எஸ். புஸ்பானந்தன் நிகழ்த்துவார்.
இவ்வருடம் முதல், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப் பணிமன்றம் ஒவ்வொரு நினைவு தின வைபவத்தின் போதும் பொருளாதார வசதி குறைந்த மாணவர்களுக்கு அடுத்த வருடத்திற்கான கல்வி உபகரணங்களை இலவசமாக வழங்கும் திட்டமொன்றையும் ஆரம்பித்து வைக்கிறது.
அந்தவகையில் இவ்வருடம் மண்டூர்ப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆனைகட்டியவெளி என்ற கிராமத்திலே அமைந்துள்ள நாமகள் வித்தியாலயத்தில் அடுத்த வருடம் ஐந்தாம் வருடத்தில் கல்வி கற்கும் பல மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.
நிகழ்வின் இறுதியில் க. பாலசுந்தரம் அண்ணாவியாரால் நெறிப்படுத்தப்பட்ட 'வள்ளி திருமணம்' என்ற கரகாட்ட நிகழ்வும் இடம்பெறவுள்ளது.


0 Comments