மதக்கலவரங்களுக்கு பஞ்சம் இல்லாத உத்தரபிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவில் இஸ்லாமியர்கள் ஆர்வத்துடன் பங்கெடுக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மையாகவே அதுபோன்ற மத ஒற்றுமை விழா வாசனை திரவியங்களின் நகர் என்று அழைக்கப்படும் உத்தர பிரதேசத்தின் கான்பூரில் நிகழ்கிறது. மாநிலத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பெருநகரம்தான் கான்பூர்.
பல்வேறு மதத்தை சேர்ந்த மக்களும் கணிசமாக வாழக்கூடிய நகரம். ஆயினும், தங்களுக்குள் சகோதரத்துவத்தை எப்போதும் விட்டுக்கொடுக்காத மக்கள்தான் இங்கு உள்ளனர். கான்பூர் மக்களின் சகோதரத்துவத்துக்கு ஒரு உதாரணம்தான் விநாயகர் சதுர்த்தி பண்டிகை. விநாயகர் சதுர்த்தி இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த பண்டிகையை இந்துக்கள் கொண்டாடும்போது, சகோதர பாசத்துடன் இஸ்லாமியர்களும் விழாவில் பங்கேற்கிறார்கள்.
இந்துக்கள் தெரு மூலைகளில் விநாயகர் சிலைகளை நிறுவி, வழிபாடு நடத்தி பிறகு நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இதேபோன்று கான்பூரிலுள்ள இஸ்லாமியர்களும் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தெருக்களில் விநாயகர் சிலைகளை நிறுவி, பூஜை, புனஸ்காரங்கள் செய்து நீர் நிலைகளில் கரைக்கின்றனர். விநாயகர் சதுர்த்தியை கொண்டாட்டமாக இந்துக்கள் கருதுவதைப்போல, இஸ்லாமியர்களும் ஆடல், பாடலுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்கின்றனர்.
இதனால் தங்களில் ஒருவர்களாகவே கான்பூர் இந்துக்கள், இஸ்லாமியர்களை பார்க்கிறார்கள். அதே நேரம் இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒருவர் மதத்தை மற்றவர்கள் போற்றிக் கொண்டு தங்களது வழிகளில் வாழ்க்கை பயணத்தை தொடர்கின்றனர். வாலீத் என்ற இஸ்லாமிய வாலிபர் கூறுகையில், தீபாவளி, ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி பண்டிகைகள் எங்களுக்கு ஒன்றுதான். எங்களுக்குள் மனதளவில் கூட வேறுபாடு கிடையாது என்றார்.
சுபன் என்ற இந்து வாலிபர் கூறுகையில், "இந்துக்களான நாங்கள் ரம்ஜானை இதே உற்சாகத்தோடு கொண்டாடுவோம். இஸ்லாமிய நண்பர்கள், ஹோலி, தீபாவளியை கொண்டாடுவார்கள். இந்தியாவுக்கு நாங்கள் முன் உதாரணமாக இருக்கிறோம். இதே ஒற்றுமை தொடர வேண்டும்" என்றார்....!

.jpg)
.jpg)
.jpg)

0 Comments