இங்கிலாந்து தலைநகரம் லண்டனிலுள்ள மன்னர் 7-வது எட்வர்டு மருத்துவமனையில் இந்தியாவை சேர்ந்த ஜெசிந்தா சால்தான்ஹா (வயது 46) நர்ஸாக பணியாற்றி வந்தார்.
கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்நாட்டின் இளவரசர் வில்லியம்சின் மனைவி கேத்தரின் இந்த ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் செயல்படும் ஒரு வானொலி நிலையம் டெலிபோனில் ஆள்மாறாட்டம் செய்து ஜெசிந்தாவிடம் பேசி கேத்தரினின் பிரசவம் தொடர்பாக சில தகவல்களை சேகரித்து ஒலிபரப்பியது.
இதற்கிடையில், நர்ஸ் ஜெசிந்தா மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதற்கு ஆஸ்திரேலிய ரேடியோ நிலையத்தின் ஒலிபரப்பே காரணமாக அமைந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
சம்பந்தப்பட்ட வானொலி நிறுவனம் உரிமையை மீறி செயல்பட்டதா? என்பது பற்றி விசாரிக்கப்படும். அது உண்மை என கண்டறியப்பட்டால் லைசென்சு ரத்து செய்யப்படலாம் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருந்தது.
இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை தங்களுக்குள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதனையடுத்து, தகவல் தொடர்பு கண்காணிப்பு அதிகாரிகள் விசாரணையை தொடங்கினார்கள்.
அந்த வானொலி நிலையத்தின் குறும்புத்தனமான செய்தி சேகரிப்பு உத்திக்கு இந்தியாவின் கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த நர்ஸ் பலியான தகவல் உலகம் முழுவதும் உள்ள மனிதநேய ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அவரது மர்ம மரணம் தொடர்பாக நடந்துவந்த விசாரணையில் ஜெசிந்தா தற்கொலை செய்துகொண்டு இறந்துப் போனது நேற்று உறுதிபடுத்தப்பட்டது.
இந்த பரிதாப மரணம் தொடர்பாக அனுதாபம் மட்டுமே தெரிவித்த அந்த வானொலி நிலையம், இந்த மரணத்துக்கு பொறுப்போ, இது தொடர்பான பழியையோ ஏற்றுக் கொள்ள இதுவரை முன்வரவில்லை.
இந்நிலையில், தற்கொலை செய்து இறந்துப்போன ஜெசிந்தா சால்தான்ஹாவின் குடும்பத்தாருக்கு 5 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்குவதாக அந்த வானொலி நிலையம் இன்று அறிவித்துள்ளது.


0 Comments