நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களுக்கு இடையில் உற்பத்தித்திறனை மேம்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், தேசிய உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சு நடத்திய போட்டியில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை இரண்டாமிடத்தை பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம் தெரிவித்தார்.
இந்தப் போட்டி வருடா வருடம் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டு வருகின்றது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் கடமையாற்றும் அதிகாரிகள், வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பான கூட்டிணைந்த சேவையாலேயே இந்த சாதனையை அடையமுடிந்ததாகவும் அவர் கூறினார்.
திணைக்களங்களுக்கிடையிலான போட்டியில் கலந்துகொண்ட மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை 2012/2013 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தித்திறன் கணிப்பீட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட தெரிவில், அகில இலங்கை ரீதியில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளது.
கடந்த வருடம் 2010/2011 காலப்பகுதிக்காக திணைக்களங்களுக்கிடையே நடத்தப்பட்ட தேசிய உற்பத்தித்திறன் தெரிவில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை அகில இலங்கை ரீதியில் மூன்றாமிடத்தை பெற்றிருந்தது.
0 Comments