யானைகளிடம் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க காத்திரமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசையும் அரச அதிகாரிகளையும் கோர வேண்டிய நிலைக்கு இம்மாவட்ட மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பலாச்சோலை கிராமத்தில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மரணமான க.நடராசா என்பவரின் இறப்பு எடுத்துக் கூறுகின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நான்கு வருடங்களாக யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி இம்மாவட்ட மக்கள் அநியாயமாக பலியாகி வருகின்றனர். இதுவரை சுமார் 25 பேருக்கு இக்கதி நேர்ந்துள்ளதுடன் சுமார் 300 வீடுகளும் சேதமாக்கப்பட்டுள்ளன. இனப்பிரச்சினை போன்று இந்தப் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு காணுமாறு நாம் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் தொடக்கம் பாராளுமன்றம் வரை கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். இறுதியில் அண்மையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்திலும் சுட்டிக்காட்டினோம். இதற்கு அமைய இரண்டு அலுவலகங்கள் மட்டுமே பெயரளவில் திறக்கப்பட்டுள்ளன. தவிர இந்தக் கூட்டத்துக்கு முன்னரும் பின்னரும் தெரிவிக்கப்பட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசாங்க அதிபரினால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களையும் வன ஜீவராசிகள் திணைக்களம் புறக்கணிப்பது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
திறக்கப்பட்டுள்ள இரு அலுவலகங்களுக்கும் அடிப்படைத் தேவையான வாகன வசதி கூட செய்து கொடுக்கப்படவில்லை. யானைகளின் அனர்த்தம் அதிகரித்துள்ள பகுதி மக்கள் ஏற்கனவே இடம்பெயர தயாரானார்கள். அதனையும் மேற்படி திணைக்கள உத்தியோகத்தர்கள் தடுத்து விட்டனர். யானைகளைத் துரத்துவதற்கு செல்லும் உத்தியோகத்தர்கள் பொது மக்களையும் தம்முடன் அழைத்துச் சென்று பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர். அவர்கள் வேண்டா வெறுப்பாக நடந்து கொள்வதுடன் இது யானை நடமாடும் காடுதானே என்றும் பொதுமக்களிடம் தெரிவிக்கின்றனர்.
சம்பவ தினம் உரிய உத்தியோகத்தர்கள் தகவல் கிடைத்தவுடனே சென்றிருந்தால் ஏற்பட்ட அனர்த்தத்தை தவிர்த்திருக்கலாம். எனவே இனிமேல் யானைகளை பொதுமக்களிடம் இருந்து காப்பாற்றுமாறு கோர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை நாம் விரும்பவில்லை. பொதுமக்களை அதுவும் மீள் குடியேற்றப்பட்ட மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசினருக்குரியதாகும். இதற்கு ஆவன செய்ய வேண்டும். திறக்கப்பட்டுள்ள இரண்டு அலுவலகங்களுக்கும் தேவையான வாகனம் ஆளணி மற்றும் வசதிகளை உடனடியாக வழங்க வேண்டும். அமைச்சரினால் கூட்டப்பட்ட விசேட கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். யானை நுழைவதை தடுப்பதற்கான மின்சார வேலிகளை உடனடியாக அமைக்க வேண்டும்.
0 Comments