கிழக்கு மாகாணத்தில் வீதி விபத்துக்களை குறைத்து பொதுமக்களின் பாதுகாப்பான போக்குவரத்தினை உறுதிப்படுத்தும் வகையில் விசேட போக்குவரத்து பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதிகளவு விபத்துக்கள் இடம்பெற்றுவரும் மாவட்டங்களான மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களை இணைத்ததாக இந்த விசேட போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன் கீழ் விசேட அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸ் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டு அவர்களுக்கான விசேட மோட்டார் சைக்கிள்களும் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் இந்துகருணாரட்ன தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சர் காரியாலயத்தில் நடைபெற்றது.
பிரதான நெடுஞ்சாலைகளில் சீரான போக்குவரத்துகளை ஏற்படுத்தும் வகையிலும் பொதுமக்களின் பாதுகாப்பான போக்குவரத்தினை உறுதிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விசேட போக்குவரத்து பிரிவு இங்கு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இந்த விசேட வீதி போக்குவரத்துக்கு பிரிவுக்குக்காக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் தனியாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் இந்த பிரிவானது கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்கவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கவுள்ளது.
இந்த பிரிவின் அங்குரார்ப்பண நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட உதவி பொலிஸ் அத்தியட்சர் மேமன் சில்வா மற்றும் அம்பாறை,மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள உதவிப்பொலிஸ் அத்தியட்சகர்கள் தெரிவுசெய்யப்பட்ட போக்குவரத்து பொலிஸார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
24 மணிநேரமும் அதிவேக வீதிகளில் போக்குவரத்து விதிகளைக் கண்காணிப்பதற்காக 600 குதிரை வலுகொண்ட ஒவ்வொன்றும் தலா 36 இலட்சம் ரூபா பெறுமதியான 12 மோட்டார் சைக்கிள்கள் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட புதிய பொலிஸ் ரோந்துப் பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளன.
இதன்போது புதிய ரோந்துப்பிரிவின் கடமைகளும் பொறுப்புக்களும் பற்றி மட்டக்களப்பு, அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ண விளக்கமளித்தார்.
0 Comments