உக்ரைன் நாட்டின் சரக்கு விமானம் என்று தவறுதலாக மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டதாக ரஷ்ய ஆதரவு தீவிரவாதிகளில் ஒருவர் இத்தாலி பத்திரிகை ஒன்றுக்கு பகிரங்க பேட்டியளித்துள்ளார். அவருடைய பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை இத்தாலி நாட்டின் Corriere Della Sera என்ற பத்திரிகைக்கு பேட்டியளித்த பெயர் சொல்ல விரும்பாத ஒரு ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர், 'மலேசிய விமானத்தை நாங்கள் உக்ரைன் நாட்டின் சரக்கு விமானம் என்று நினைத்துதான் தாக்கினோம். எங்களுக்கு மேல் இருந்த தலைவர்கள் இது உக்ரைன் விமானம் என்று உறுதியாக கூறியதால்தான் நாங்கள் தாக்குதலை ஆரம்பித்தோம். ஆனால் விமானம் நொறுங்கி விழுந்து சிதறிக்கிடந்த இடத்தில் இருந்த குழந்தைகளின் பிணங்களை பார்த்த பொழுதுதான் நாங்கள் செய்த தவறு எங்கள் மனதை உறுத்தியது. கண்டிப்பாக இது ஒரு தவறான தாக்குதல்தான். மலேசிய பயணிகள் விமானத்தை தாக்கவேண்டும் என்ற எண்ணம் எங்கள் இயக்கத்திற்கு கொஞ்சமும் இல்லை" என்று கூறினார்.
இந்த தவறான தாக்குதலால் எங்களது மனம் பாதிக்கப்பட்டிருப்பது என்பது உண்மைதான். எனினும் எங்கள் விடுதலைக்காக நாங்கள் செய்துகொண்டிருக்கும் போராட்டத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். உக்ரைன் நாட்டு விமானங்களை தொடர்ந்து தாக்குதல் செய்வோம். ஆனால் இனியும் ஒருமுறை இதுபோன்ற தவறு நடக்காமல் கண்டிப்பாக கவனமுடன் செயல்படுவோம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
0 Comments