ஈராக்கில் ராணுவத்துக்கும், ஐ.எஸ்.ஐ.எல். தீவிரவாதி களுக்கும் இடையே உள்நாட்டு போர் தற்போது தீவிரமடைந்துள்ளது. தீவிரவாதிகள் ஈராக்கில் பலுஜா, திக்ரித், மொசூல் உள்பட 5 முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளனர்.
தொடர்ந்து தீவிரவாதிகள் பெரும்பாலான நகரங்களை தங்களது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர ராணுவத்தினருடன் கடுமையான சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈராக்கில் உள்நாட்டு போர் காரணமாக அங்கு உள்ள ஏராளமான இந்தியர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களில் தமிழர்களும் அடங்குவர்.
ஈராக்கின் திக்ரித் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் தூத்துக்குடியை சேர்ந்த லெசிமா ஜெரோஸ் மோனிஷா என்பவர் நர்சாக பணியாற்றி வருகிறார்.
இதே ஆஸ்பத்திரி யில் தமிழகத்தை சேர்ந்த பெண்கள் பலர் நர்சாக பணி புரிந்து வருகின்றனர். திக்ரித் நகரை கைப்பற்றிய தீவிரவாதிகள் தற்போது இந்த ஆஸ்பத்திரியை சுற்றி வளைத்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத் துள்ளனர்.
அந்த ஆஸ்பத்திரி மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகள் குண்டுகளை வீசினர். இதில் அங்கு வேலை பார்த்த ஒருவர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி நர்சு லெசிமா ஜெரோஸ் மோனிஷா தூத்துக்குடியில் உள்ள தனது தாய் எட்விஜம்மாளிடம் போனில் பேசினார். அப்போது நாங்கள் நன்றாக உள்ளோம். எங்களை பற்றி கவலைப்பட தேவையில்லை என்று கூறினார்.
இதற்கிடையே எட்விஜம்மாள் கடந்த 30-ந் தேதி தனது உறவினர்களுடன் தூத்துக்குடி கலெக்டர் ரவிக்குமாரை சந்தித்து ஈராக்கில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்து வரும் தனது மகளை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தார். இந்த நிலையில் நேற்றிரவு நர்சு லெசிமா ஜெரோஸ் மோனிஷா தனது தாய்க்கு போன் செய்தார். அப்போது அவர் தனது தாயிடம் ஈராக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. எங்களது ஆஸ்பத்திரியை தீவிர வாதிகள் அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு தீவிரவாதிகள் எங்களிடம் நாங்கள் உங்களை ஒரு இடத்திற்கு அழைத்த செல்ல போகிறோம். உங்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது. நீங்கள் பயப்பட தேவையில்லை. நீங்கள் எங்களுடன் வரவேண்டும் என துப்பாக்கியை காட்டி மிரட்டுவது போல பேசினர். தற்போது நாங்கள் நோன்பு வைத்துள்ளோம். நோன்பை முடித்து விட்டு வருவோம். அப்போது எங்களுடன் வரவேண்டும் என்று தீவிரவாதிகள் கூறினர். இதனால் நாங்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளோம்.
தீவிரவாதிகள் மிரட்டல் குறித்து நாங்கள் ராணுவத்தை தொடர்பு கொண்டு கூறினோம். ஆனால் ராணுவத்தினர் எங்களிடம் தீவிரவாதிகள் கூறும் இடத்திற்கு செல்ல வேண்டாம். நீங்கள் ஆஸ்பத்திரியை விட்டு ஒரு போதும் வெளியே வரவேண்டாம் என கூறுகின்றனர். தீவிரவாதிகளை விரட்ட ராணுவத்தினர் குண்டுகளை வீசுகின்றனர். இதனால் எப்போது வேண்டுமானாலும் எங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே உடனடியாக எங்களை மீட்க தமிழக அரசை வலியுறுத்துங்கள் என போனில் கூறி கதறி அழுதாள்.
மகள் போனில் கூறிய தகவலால் அதிர்ச்சியடைந்த எட் விஜயம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் அவர்கள் லெசிமா ஜெரோஸ் மோனிஷா நிலை என்ன ஆகுமோ? என்ற அச்சத்தில் உள்ளனர். அவரை மீட்க மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


0 Comments