Home » » 3 நாட்களாக சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்தார் ‘‘மறுபிறவி கிடைத்ததால் கண்களை தானம் செய்கிறேன்’’ உயிர் தப்பிய ஒடிசா வாலிபரின் உருக்கமான பேட்டி

3 நாட்களாக சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்தார் ‘‘மறுபிறவி கிடைத்ததால் கண்களை தானம் செய்கிறேன்’’ உயிர் தப்பிய ஒடிசா வாலிபரின் உருக்கமான பேட்டி


3 நாட்களாக சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்ததாகவும், மறுபிறவி கிடைத்ததால் கண்களை தானம் செய்கிறேன்’’ என்றும் கட்டிட விபத்தில் உயிர் தப்பிய ஒடிசா வாலிபர் உருக்கமாக கூறினார்.
ஒடிசா வாலிபர் 

ஒடிசா மாநிலம் கேந்திரபாலா அருகேயுள்ள ராஜ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்குமார் ராவ்(25). இவர் போரூரில் விபத்து நடந்த கட்டிடத்தில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
விபத்து நடந்த போது கட்டிட இடிபாடுகளில் சிக்கி மண்ணில் புதைந்த அவர், 72 மணி நேரத்திற்கு பிறகு அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டார். தற்போது போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் பிரகாஷ்குமார் ராவ் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:–

சிறுநீரை குடித்தேன் 

கட்டிட விபத்து ஏற்பட்டபோது, நான் கட்டிடத்தின் உள்ளே வேலை செய்து கொண்டு இருந்தேன். கட்டிடம் சரிந்த நிலையில் நான் இருந்த அறையில் உள்ள ஒரு சிலாப்பில் உட்கார்ந்த நிலையில் மாட்டிக் கொண்டேன். இருட்டை தவிர வேறு எதுவும் என் கண்ணில் தெரியவில்லை.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் உதவிக்காக காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று கூப்பிட்டபடியே இருந்தேன். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எனது வயிறு பசித்தது. நாக்கு உலர்ந்தது. ஆனால் உணவுக்கு வழியில்லை. தொண்டை காய்ந்து வரண்டு போன நிலையில் எனது சிறுநீரை நானே குடித்தேன்.

கண்கள் தானம் 
உயிர் பிழைப்பேன் என்று கனவில் கூட நான் நினைக்கவில்லை. நான் இப்போது உங்கள் முன் நிற்கிறேன் என்றால் அது கடவுள் செய்த அதிசயம். இது எனக்கு மறுபிறவி.

உள்ளே இருந்த சமயத்தில் மேலே இருந்து மீட்புபணிகள் நடைபெற்றதை நான் நன்றாகவே உணர்ந்தேன். எனக்கு இது மறுபிறவி என்பதால் என்னுடைய கண்கள் இரண்டையும் தானம் செய்ய முடிவெடுத்துள்ளேன். என்னுடைய 2 கண்களும் நான் இறந்தபிறகு மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும்.

இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார்.
கண்மூடி கண் திறப்பதற்குள்... 
விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த மருதமுத்து(வயது 25) என்பவர் கூறியதாவது:–

சம்பவத்தன்று விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று இடிச்சத்தம் கேட்டது. தொடர்ந்து கட்டிடத்தின் மேலிருந்து சிமெண்ட் துகள்கள் கொத்துக்கொத்தாக விழுந்தன.

கண்மூடி கண் திறப்பதற்குள் கட்டிடம் சரிந்து விழுந்தது. எனக்கு நினைவு வரும்போது மண் குவியலுக்கு அடியில் நான் குப்புற படுத்துக் கிடந்தேன். கை, கால்களை கூட அசைக்க முடியவில்லை. எங்கும் ஒரே இருட்டு.

எப்படி மீட்கப்பட்டேன்? எப்படி மருத்துவமனையில் வந்தேன்? எவ்வாறு தேறினேன்? என்பதெல்லாம் எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் பிழைத்திருக்கிறேன் என்றால் அது கடவுளின் அருளால் தான். வாழ்நாள் முழுவதும் இந்த சம்பவத்தை மறக்க மாட்டேன். இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் நான் மீளவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
2 தூண்களுக்கு நடுவில்... 

ராமநாதபுரம் மாவட்டம் நெற்குப்பை பகுதியைச் சேர்ந்த கந்தசாமி(53). விபத்து நடந்த கட்டிடத்துக்கு அருகில் உள்ள மரக்கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். அவர் கூறுகையில், ‘‘கட்டிடம் சரிந்து எங்களது கடையின் மீது விழுந்தது. இதில் கடையின் 2 தூண்களுக்கு நடுவில் இடிபாடுகளுக்கிடையில் நான் சிக்கிக்கொண்டேன். என்னால் நகரக்கூட முடியவில்லை. தற்போது வரை பிழைத்தேன் என்பதை நான் நம்பவில்லை. ஒரு சின்ன சத்தத்தை கூட என்னால் தாங்கமுடியாத நிலையில் நான் இருக்கிறேன். கடவுளுக்கு நான் கூறுகிறேன்’’, என்றார்.
பசி பட்டினியுடன்... 

மதுரை திருமங்கலம் புதுப்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி(23) என்பவர் கூறுகையில், ‘‘கட்டிட இடிபாடுகளுக்கிடையில் நாங்கள் பட்ட கஷ்டங்களையும், துயரங்களையும் சொல்லி மாளாது. ஒரு ‘லிப்ட்’ அறுந்து விழுவது போன்ற பயங்கர சத்தத்துடன் கட்டிடம் சரிந்து விழுந்தது. அந்த காட்சியை என்னால் மறக்க முடியாது. பசி பட்டினியுடன் கட்டிட இடிபாடுகளில் மண்ணோடு மண்ணாக புதைந்திருந்ததை வாழ்நாள் முடியும் வரை மறக்க முடியாது. கடவுளின் ஆசியால் நான் இன்று உயிரோடு இருக்கிறேன்’’ என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |