Home » » மட்டக்களப்பு வெல்லாவெளியில் யானைகளின் அட்டகாசம்

மட்டக்களப்பு வெல்லாவெளியில் யானைகளின் அட்டகாசம்


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்துக்குள் நேற்று சனிக்கிழமை இரவு புகுந்த யானைக்கூட்டங்களினால் பல்வேறு சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் மக்களை அச்சநிலையையும் அடையச்செய்துள்ளது.
நேற்று சனிக்கிழமை இரவு 8.30மணியளவில் வெல்லாவெளி பிரதேசத்துக்குள் புகுந்த இருபதுக்கும் மேற்பட்ட யானைகள் பிரதேச செயலகம் மற்றும் ஆலயங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

யானையின் தாக்குதல் காரணமாக பிரதேச செயலகத்தின் நுழைவாயில் கதவுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் பிரதேச செயலகத்துக்கு பின்புறமாகவுள்ள கல்வித்திணைக்களத்துக்கு சொந்தமான கட்டிடங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் வெல்லாவெளி முத்துமாரியம்மன் ஆலயத்தின் மதில்களும் உடைக்கப்பட்டுள்ளதுடன் களஞ்சிய அறையும் யானையின் தாக்குதலால் சேதமடைந்துள்ளதுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த நெல் மூடைகளும் யானைகளினால் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது விவேகானந்தபுரம் பகுதியில் இரண்டு வீடுகளுக்கும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளதுடன் சிறுபோக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பல வயல்களும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

யானை கூட்டம் வெல்லாவெளி பிரதேசத்துக்குள் புகுந்ததினால் வீடுகளில் இருந்த மக்கள் அச்சம் காரணமாக வீதிகளுக்கு வந்து யானைகளை விரட்டும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.இந்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதிக்கு வந்த இராணுவத்தினர் யானைகளை துரத்தியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதேநேரம் குறித்த சம்பவம் தொடர்பில் வன ஜீவராசிகள் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தமுனைந்தபோதிலும் அவர்களின் தொலைபேசிகளில் தொடர்புகொள்ளமுடியாத நிலையேற்பட்டதாகவும் இரவு 10.30மணிக்கு பின்பே அவர்களை தொடர்புகொள்ளமுடிந்ததாகவும் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் வில்வரெட்னம் தெரிவித்தார்.

போரதீவுப்பற்றின் விவேகானந்தபுரத்தில் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளபோதிலும் அங்கு ஒரு அதிகாரியே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அவர்களது அலுவலகத்தினை தாண்டியே யானைகள் வெல்லாவெளி பிரதேசத்துக்குள் நுழைந்துள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.இதுவரையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இராணுவத்தினரே யானைகளை விரட்டுவதில் மிகவும் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர்கள் இல்லாவிட்டால் பாரிய சேதங்களை யானைகள் ஏற்படுத்தியிருக்கும் எனவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.






Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |