Advertisement

Responsive Advertisement

கிழக்கு மாகாணசபையில் கண்டனப் பிரேரணையை தவிசாளர் நிராகரிப்பு! - முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் செங்கோலுடன் ஓட்டம்

அளுத்கம முஸ்லிம்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பொதுபல சேனா இயக்கத்தையும் அரசாங்கத்தையும் கண்டித்து இன்று கிழக்கு மாகாண சபை அமர்வில் மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீலினால் சமர்ப்பிக்கப்பட்ட அவசர விசேட பிரேரணை தவிசாளரினால் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து சபையில் குழப்பம் ஏற்பட்டதுடன் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களால் செங்கோல் தூக்கிச் செல்லப்பட்டது. கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்வு தவிசாளர் ஆரியபதி கலப்பதி தலைமையில் இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமானது.
இதன்போது அளுத்கம சம்பவத்தை கண்டித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கறுப்புப் படி அணிந்து சபைக்கு சமூகமளித்திருந்தனர். அதேவேளை கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் அளுத்கம முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பொதுபல சேனா இயக்கத்தையும் அரசாங்கத்தையும் கண்டித்து முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அவசர விசேட பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க ஆயத்தமானார்.
இதற்கு அனுமதி வழங்க தவிசாளர் மறுப்புத் தெரிவித்து அப்பிரேரணையை நிராகரித்தார். இதனைத் தொடர்ந்து சபையில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். இதனால் தவிசாளர் சபையை முற்பகல் 11.30 வரை ஒத்திவைத்தார். மீண்டும் சபை கூடியபோது குறித்த பிரேரணையை விவாதத்திற்கு ஏற்குமாறு மு.கா. குழுத் தலைவர் ஜெமீல் மற்றும் மு.கா. உறுப்பினர்கள் வற்புறுத்திய போதிலும் அதற்கு தவிசாளர் உடன்படவில்லை. இதனால் சபையில் மீண்டும் அமளி துமளி, கூச்சல் குழப்பம் ஏற்பட்டதனால் சபையை மீண்டும் 15 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அதன் பின்னர் சபை மூன்றாவது தடவையாக கூடியபோதிலும் குறித்த பிரேரணையை சபையில் சமர்ப்பிதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மு.கா. குழுத் தலைவர் ஜெமீல் மற்றும் மு.கா. உறுப்பினர்கள் விடாப்பிடியாக நின்று கோஷமிட்டனர். எனினும் தவிசாளர் அதற்கு இடமளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மு.கா. உறுப்பினர்கள் செங்கோலை தூக்கிக் கொண்டு சபைக்கு வெளியே ஓடினர். இதனால் தவிசாளர் சபையை கால வரையறையின்றி மூன்றாவது தடவையாக ஒத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து அங்கு மு.கா. குழுத் தலைவர் ஜெமீல், ஊடகவியலாளர் மாநாட்டை கூட்டி தமது தரப்பு நிலைப்பாட்டை விளக்கிக் கூறினார்.
இதன்போது தவிசாளரின் தன்னிச்சையான நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்த ஜெமீல், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments