அளுத்கம. தர்காநகர் மற்றும் பேருவளை பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தினால் தீவைக்கப்பட்ட சேதமாக்கப்பட்ட வீடுகளும் மற்றும் வர்த்தக நிலையங்களை புனரமைக்கும் பணிகள் நேற்று ஆரம்பமாகியுள்ளது. புனரமைப்பு பணிகளை இராணுவம் பொறுப்பேற்றுள்ளதுடன் இதற்கென இராணுவத்தின் பொறியியல் பிரிவைச் சேர்ந்த நிபுணத்துவம் பெற்ற சுமார் 700 ற்கும் அதிகமான இராணுவத்தினர் புனரமைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஊடக மையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
|
முழுமையாக மற்றும் பகுதியளவில் பாதிக்கப்பட்ட 94 வீடுகள், 137 வியாபார நிலையங்கள் அடையாளங் காணப்பட்டு புனரமைக்கும் பணிகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முழுமையாக பாதிக்கப்பட்ட 27 வீடுகள் மற்றும் 47 வியாபார நிலையங்களும், பகுதியளவில் பாதிக்கப்பட்ட 67 வீடுகள் மற்றும் 90 வியாபார நிலையங்களும் இதில் அடங்கியுள்ளன. இந்த புனரமைப்பு பணிகளுக்கு அரசாங்கம், திறைசேரி. மீள்குடியேற்ற அமைச்சின் மூலம் 200 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி துரிதமாக இந்த புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள இராணுவம் திட்டமிட்டுள்ளது என்றார்.
இதேவேளை மேற்கு பிராந்திய பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உபய மெதவல தலைமையில் நேற்று புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. தீ வைக்கப்பட்ட, சேதமாக்கப்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் ஒவ்வொன்றுக்கும் சென்று பார்வை யிட்டதுடன் முதற் கட்டமாக சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டனர். இதேவேளை, சேதமாக்கப்பட்ட வீடுகளை ஒரு மாதகாலத்திற்குள் மீள புனரமைத்து அவர்களை அவ்வீடுகளில் வசிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.
![]() |
0 Comments