அல்லா உதவியுடன் 20நிமிடம் முதலையுடன் போராடினோம் என்கிறார் 64வயது ஆயிசாஉம்மா!!!
முதலையோடு 20 நிமிடங்கள் சகோதரிகள் துணிகரமாகப் போராடியதன் பலனாக உயிரோடு காப்பாற்றப்பட்ட மௌபியாவின் இடது கால் துண்டிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை மலையடிக்கிராமத்தைச்சேர்ந்த முகம்மதலியார் மௌபியா (வயது 18) என்ற சிறுமிக்கே இவ்விதம் இடம்பெற்றுள்ளது.அவர் தற்சமயம் கண்டி பேராதனை போதனா வைத்தியசாலையில் உள்ளார்.
கடந்த 15ம் திகதி செவ்வாய்க்கிழமை நீராடுவதற்காக 15 கிலோமீற்றர் தொலைவிலுள்ள நயினாகாட்டிற்கு தமது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் சென்றபோது முதலை மேற்படி சிறுமியை கௌவிப்பதம் பார்த்தது.
முதலையிடமிருந்து சிறுமியைப் போராடிப்பெற்ற மறுகணம் அவரை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து கண்டி பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு உடனடியாக தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை நடைபெற்றது.அங்கு முதலையால் கடியுண்ட இடுத கால் துண்டிக்கப்பட்டது. தற்சமயம் அவர் வார்ட்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறார்.
இது தொடர்பில் நேரடி றிப்போர்ட் எடுப்பதற்காக நானும் சிறுவர் மற்றும் மனித உரிமை விவகாரத்தில் செயற்பட்டாளர்களாக ஈடுபட்டுவரும் மனித அபிவிருத்தித்தாபனத்தின் இணைப்பாளர் பி.சிறிகாந்தின் உதவி இணைப்பாளர் எம்.ஜ.றியாழ் சகிதம் செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை மலையடிக்கிராமத்திலுள்ள சிறுமியின் வீட்டுக்குச் சென்றோம்.
சிறுமியைப் போராடி காப்பாற்றிய அவரது சகோதரி முகம்மதலியார் றஸ்மியா (வயது 28) மற்றும் அவரது பெரியம்மா ஆதம்பாவா ஆயிசாஉம்மா(வயது64) ஆகியோர் அங்கிருந்தனர்.
சிறுமியின் தாயார் ஆதம்பாவா செமிலத்தும்மா (வயது 60) அவரது மகள் ஜெரீன் மற்றும் மாமி உள்ளிட்ட பலர் வீட்டிலிருந்தனர்.
இஸ்மாலெவ்வை முகம்மதலியார் ஆதம்பாவா செமிலத்தும்மா தம்பதியினருக்கு 17 பிள்ளைகள்;. அவர்களில் கடைசி மகள் அதாவது 17வது பிள்ளையே இவ்விதம் முதலை தாக்குதல் சம்பவத்தில் அகப்பட்ட மௌபியா ஆவார். இவரை சபானா என்றும் அழைப்பதுண்டு.
சம்பவம்
இத்துணிகர சம்பவம் பற்றி முதலையுடன் போராடிக் காப்பாற்றிய சகோதரிகளுடன் உடனிருந்து உதவிய அவரது பெரியம்மா ஆதம்பாவா ஆயிசாஉம்மா விபரித்தார்.
அவர் விபரிக்கையில்:
கடந்த 15ம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4மணியளவில் நாம் குளிப்பதற்காக சுமார் 10 பேர் படி லொறியில் நெயினாகாட்டிற்குச் சென்றோம். அங்கு ஆற்றிற்குள் இறங்கி சுமார் ஒரு மணிநேரம் நீராடினோம்.
ஒவ்வொருவராக கரையேறினார்கள். நேரம் 5.20 மணியிருக்கும் இறுதியாக ஆற்றிற்குள் நானும் சிறுமியின் சகோதரிகளான றஸ்மியா மற்றும் ருசானா ஆகிய மூவரும் கரையேறத் தயாரானோம்.
அவ்வேளையில் கரையில் நின்றிருந்த சிறுமி மௌபியா அங்கு வீசிய காற்றில் மண் படவே தனைக் கழுவுவதற்காக ஆற்றங்கரைக்கு வருவதைக்கண்டோம். அவர் ஆற்றிற்குள் முழங்கால் அளவு தண்ணீருக்குள் நின்று கழுவ முற்பட்டவேளை பாரிய முதலையொன்று அவரது இடது காலை பாய்ந்து கௌவியது. அப்போது முதலைக்கும் எமக்குமிடையே 3அடி இடைவெளியே இருந்தது. முதலை சுமார் 10 அடி நீளமாகவிருந்தது.
கௌவியதும் அவர் உடனே ஆற்றிற்குள் என்னருகில் இருந்த றஸ்மியாவின் மீது கட்டிப்பிடிக்க அவரும் இவரை கழுத்திற்குள் கையைப் போட்டு இறுக்கி பிடித்து இழுத்தார். அருகிலிருந்த நாமும் சேர்ந்து இழுத்தோம் . முதலை விட்டபாடில்லை.
நாம் அல்லா அல்லா என்று உரக்கக் கத்தினோம். முதலையுடன் போராட்டம் சுமார் 20 நிமிடம் நீடித்தது. நாம் மூவரும் ஆற்றிலிருந்து முதலையோடு கரைக்கு இழுத்து வந்தோம். கரையில் சுமார்6 அடி வரை வந்திருப்போம்.அப்போதும் முதலை விடவில்லை.
அதனிடையே எம்மை ஏற்றிவந்த படி டிரைவரும் அங்கிருந்தவர்களும் வந்து முதலையின் சொத்தையில் அறைந்தார்கள். அது விடவில்லை. இரத்தவாறு ஓடுகிறது.
மற்றுமொருவர் அங்கு துணி துவைக்க வைத்திருந்த பாரிய கல்லைத் தூக்கி முதலையின் தலையில் ஓங்கிப்போட்டார். அந்தவேளை முதலை வாயை திறந்தது. உடனே சிறுமியை இழுத்தெடுத்து துணியில் சுற்றியெடுத்துக்கொண்டு சம்மாந்துறை ஆஸ்பத்திரியில் சேர்த்தோம்.சிறுமியின் இடதுகாலில் முதலை சதையைச்சப்பியதுடன் எலும்புகள் நொருங்கிக்காணப்பட்டன. என்று அழுகையுடன் கூறினார்.
சகோதரி ஜெரீன் துணிவுடன் கூறுகையில் :
எனது தங்கைக்கு நடந்த சம்பவம் பற்றி கவலையடையும் அதேவேளை நயினாகாட்டில் வாழும் பல அப்பாவி குழந்தைகள் முதல் பலரும் அந்நத ஆற்றிலேயே குறிப்பது வழமை. முதலையிடமிருந்து அவர்களைக் காப்பாற்றும் பொறிமுறையொன்றை அரசாங்கமும் உயரதிகாரிகளும் மேற்கொள்ளவேண்டும். எதிர்காலத்தில் இப்படிப்பட்ட துன்பியல் சம்பவங்கள் யாருக்கும் நிகழக்கூடாது. அவர் அல்அர்சத் பாடசாலையில் உயர்தரம் பயின்றவர். அவர் துணிவுள்ளவர்.இன்று அவர் தொலைபேசி மூலம் எம்முடன் பேசினார்.நானும் தாருஸ்ஸலாமில் பயின்றவள். குடும்ப சுமை காரணமாக படிப்பைக் கைவிட்டேன். நாம் ஏழைகள்தான்.
எமது இப்பகுதியில் நீர் வசதி இல்லாமையினால்தான் இவ்வளவு தூரம் சென்று போராடவேண்டியுள்ளது. எனவே அரசியல்வாதிகள் இப்பகுதிக்கு குழாய்நீரை எடுத்துத்தர நடவடிக்கை எடுத்தாலே போதுமானது . என்றார்.
முதலையிடம் சிக்கிய சகோதரியின் படத்தையும் போராடி மீட்ட சகோதரிகளினது படங்களையும் தயவுசெய்து அவர்களது எதிர்காலம் கருதி ஊடகங்களில் போடவேண்டாம் என்று ஜெரீன் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்களது படங்கள் இங்கு பிரசுரமாகவில்லை. எனினும் காப்பாற்றிய பெரியம்மா மற்றும் சிறுமயின் தாயார் மற்றும் அவரது வீடு என்பன பிரசுரமாகிறது.
0 Comments