மட்டக்களப்பு வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 555 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய பிரமாண்டமான நுழைவாயில் மற்றும் புதிய கட்டங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 19ஆம்திகதி சனிக்கிழமை பகல் திறந்து வைக்கிறார்.
கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி கிட்னன் கோபிந்தராஜா தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுகளில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கா மற்றும் உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவூத், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், ஜனாதிபதி ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் மற்றும் அரசியல்வாதிகளும் அதிதிகளாகக் கலந்து கொள்கின்றனர்.
அத்துடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவி பேராசிரியை திருமதி சானிகா ஹிரும்புரேகம மற்றும் அமைச்சின் அதிகாரிகளும், கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் உத்தியேகத்தர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்த அபிவிருத்தித்திட்டங்களில் 7 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட புதிய நுழைவாயில், 230 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட வர்த்தக முகாமைத்துவ பீட கட்டடத் தொகுதி, 121 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட கலை கலாசார பீட கட்டடத் தொகுதி, 171 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட பிரதான நூலக கட்டடத் தொகுதி, 25 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட உள்ளக விளையாட்டரங்கு என்பன அடங்குகின்றன.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 19ஆம்திகதி நடைபெறவுள்ள அபிவிருத்தித்திட்டங்களின் திறப்பு குறித்து கருத்துத் தெரிவித்த துணைவேந்தர் கலாநிதி கிட்னன் கோபிந்தராஜா,
இப் பல்கலைக்கழகத்தினை இலங்கையில் முன்னணியானதும் வித்தியாசமும் முன்மாதிரியுமான பல்கலைக்கழகமாக கல்வி, பௌதீக வளம் சார்ந்தும் மாற்றுவதே எனது நோக்கமாகும்.
கடந்த 35 வருடங்களில் மேற்கொள்ளப்பாடாதளவுக்கான அபிவிருத்தித்திட்டங்கள் தற்போது ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்தும் கல்வி பௌதீக, மாணவர் நலன் சார்ந்த அனைத்து விடயங்களும் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் எந்தவிதமான குறைபாடுகளும் அற்றதாக சிறிது காலத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும், வளாகங்களும் மாறும் அத்துடன் கல்வித் தரத்தில் எமது பல்கலைக்கழகம் உலக தரத்தில் முன்னணிக்கு வரும் என்று தெரிவித்தார்.
0 Comments