மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 09 பேரையும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரக்காடு பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம் இருந்த பிரதேசத்தில் புதையல் தோண்டிக்கொண்டிருந்தாகக் கூறப்படும் 09 பேர் கடந்த 28ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
குறிப்பிட்ட இடத்தில் பணம் அல்லது பெறுமதியான பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றதா என்பதைக் கண்டறிய பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உதவி நாடப்பட்டிருந்த நிலையில் இரு பேராசிரியர்கள் இது தொடர்பில் ஆய்வினையும் மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.
இது தொடர்பான வழக்கு வியாழக்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி றியாழினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேக நபர்களின் சார்பில் பிரபல சட்டத்தரணி பிரேம்நாத் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.
இதன்போது பொலிஸாரினால் பிணையில் விடுவிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டபோதும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு சட்டத்தரணி பிரேம்நாத் கோரியிருந்தார்.
இந்த நிலையில் சந்தேகநபர்கள் தொடர்பில் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் ஒன்பது பேரையும் நீதிமன்றம் விடுவித்ததாக சட்டத்தரணி பிரேம்நாத் தெரிவித்தார்.
368 வர்த்தகர்கள் கைது
நுகர்வோர் சட்டங்களை மீறி வியாபாரத்தில் ஈடுபட்ட 368 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
உரிய தரத்திலான தராசுகளை பயன்படுத்தாத குற்றச்சாட்டின் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக நுகர்வோர் கேட்கும் அளவை விடவும் குறைந்தளவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
தராசுகளில் திருத்தங்களைச் செய்து இவ்வாறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
நுகர்வோர் விவகார அமைச்சின் உத்தரவிற்கு அமைய பண்டிகைக் காலத்தை இலக்க வைத்து நாடு முழுவதிலும் சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
மக்களை ஏமாற்றி வியபாரம் செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை சுங்கப் பிரிவினர் மீட்டுள்ளனர்.
சிறிய வெங்காயம் உள்ளிட்ட பொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
12500 கிலோ கிராம் எடையுடைய சிறிய வெங்காயம், புகையிலை, சிகரட், பாதணிகள் உள்ளிட்ட பொருட்களை சுங்கப்பிரிவினர் மீட்டுள்ளனர்.
இந்தப் பொருட்கள் உரிய முறையில் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இறக்குமதி வரியை தவிர்த்துக்கொள்ள இவ்வாறு மோசடியான முறையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
வெடிப் பொருட்களுடன் மூன்று இளைஞர்கள் கைது
மன்னார், சவுத்பார் கடற்கரையில் வெடிப் பொருட்களை வைத்திருந்த மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகம் ஏற்படும்படி நடந்து கொண்ட மூன்று இளைஞர்களை பொலிஸ் குழுவொன்று சோதனையிட்ட போதே அவர்களிடம் வெடிப் பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இளைஞர்கள் வைத்திருந்த 36 டைனமைட் குச்சிகள், 14 டெட்டநேட்டர்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர்.
இவர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு 5 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 ஆயிரத்து 500 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments