Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு மாநகரசபை சிற்றூழியர்கள் தனியார் பஸ் நிலையத்தினை மறித்து மறியல் போராட்டம்


மட்டக்களப்பு மாநகரசபையின் வரிசேகரிப்பாளர் ஒருவர் தனியார் பஸ் உரிமையாளர் ஒருவரால் தாக்கப்பட்டதை கண்டித்தும் அவரை கைதுசெய்யுமாறு கோரியும் தனியார் பஸ் நிலையத்தினை மறித்து மாநகரசபை ஊழியர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் பொலிஸார் வழங்கிய உறுதிமொழியினையடுத்து கைவிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தனியார் பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு மாநகரசபை சிற்றூழியர்கள் தனியார் பஸ்வண்டிகளை செல்ல விடால் மாநகரசபை வாகனங்களை நிறுத்தி  மறித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்தினர்.

நேற்று ஞாயிற்றுக்கிமை தனியார் பஸ் உரிமையாளர் மட்டக்களப்பு மாநகரசபையில் பற்றுச் சீட்டு வழங்குனராக கடமைபுரியும் சிற்றூழியர் ஒருவரைத் தாக்கியமை தொடர்பில் அச்செயற்பாட்டைக் கண்டித்து மாநகரசபை சிற்றூழியர் நலன்புரி அமைப்பினால் தனியார் பஸ்வண்டிகளை முற்றுகையிட்டு இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதனால் மட்டக்களப்பு நகரில் சிறு பதற்ற நிலை காணப்பட்டது. பஸ் நிலையம் முன்பாக பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்துப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்குவந்த மட்டக்களப்பு பொலிஸ் தலைமைய பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குணரெட்ன, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், மாநகரசபை சிற்றூழியர் நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள்,மட்டக்களப்பு சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவர் ராஜன் மற்றும் பொலிஸ் அதிகாரிகள்,தனியார் பஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பல தரப்பினர் சம்பவ இடத்துக்கு வருகைதந்தனர்.

இதன்போது அங்கு இடம்பெற்ற நிலைமைகள் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் தலைமைய பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குணரெட்ன பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதுடன் தாக்கியதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள நபரை 24 மணிநேரத்துக்குள்  கைதுசெய்து சட்ட நடவடிக்கையெடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதன்போது சம்பவ இடத்துக்கு மாகாணசபை உறுப்பினர்களான துரைராஜசிங்கம் துரைரெட்ணம் ஆகியோரும் வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் ஆர்ப்பாட்டத்தின்போது மாநகரசபையின் பாரம் தூக்கும் இயந்திரத்தினால் தனியார் பஸ் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

சேதமடைந்த பஸ்ஸ{க்கு உரிய நஸ்ட ஈடுகள் வழங்கப்படாதவிடத்து பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடவேண்டிய சூழ்நிலையேற்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக தனியார் பஸ்கள் முடக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று திங்கட்கிழமை காலையில் தூர பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாக தெரிவித்தனர்.

















Post a Comment

0 Comments