ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 129 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறுதி சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்காகிஸ்தான் ஆகிய 5 அணிகள் இடையிலான 12ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் இடம்பெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிசுற்றுக்கு முன்னேறும்.
அந்த வகையில் மிர்பூரில் இடம்பெறும் இன்றைய 7வது லீக் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்து 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்களை பெற்றது.
அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய திரிமான 5 ஓட்டங்களுடன் ஏமாற்றமளிக்க குசேல் ஜனித் பெரேரா 33 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.
அடுத்து வந்த சங்கக்கார நிதானமாக துடுப்பெடுத்தாட ஏனைய வீரர்களான மஹேல ஜயவர்தன 14, சந்திமால் 26, சத்துருங்க டி சில்வா 17 என சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
குமார் சங்கக்கார 76 ஓட்டங்களுடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்துச் சென்றார். மெத்தியூஸ் 45, பெரேரா 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் முஹமட் நபி உட்பட 8 பந்து வீச்சாளர்கள் இன்று பந்து வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் மிர்வாயிஸ் அஸ்ரப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து 254 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 38.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
அவ்வணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் முஹமட் ஷாஜத் 7, நூர் அலி 21, அஸ்கர் 27, நவுருஸ் 4 சமியுல்ஹா 6, முஹமட் நபி 37 என சொற்ப ஓட்டங்களுடன் ஆட்மிழந்து ஏமாற்றமளித்தனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் அஜந்த மெண்டிஸ் மற்றும் திசர பெரேரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டார்.
0 Comments