கிழக்கு மாகாணத்தில் 189 இலங்கை கல்வி நிருவாக சேவை (S.L.E.S)அதிகாரிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.இது கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே இத்தட்டுப்பாட்டை உடனடியாக நீக்கி கல்வி அபிவிருத்தியை காண கல்வி அமைச்சர் முன்வரவேண்டும்
இவ்வாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் தலைவர் வி.ரி.சகாதேவராஜா விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
கிழக்கு மாகாணம் அம்பாறை மட்டக்களப்பு கல்முனை அம்பாறை ஆகிய 04 கல்வி மாவட்டங்களையும் 17 வலயக்கல்விக் காரியாலயங்களையும் 48 கோட்டக்கல்விக்காரியாலயங்களையும் 1097 பாடசாலைகளையும் கொண்டுள்ளது. இங்கு 3லட்சத்து 93ஆயிரத்து 684 மாணவர்களும் 20124 ஆசிரியர்களும் 911 அதிபர்களும் உள்ளனர்.
கிழக்கு மாகாணகல்விப்புலத்திற்கு அனுமதிக்கப்பட்ட இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளுக்கான ஆளணி 285 ஆகும். ஆனால் தற்போது ஆக 96 அதிகாரிகளே சேவையிலுள்ளனர். எனவே மேலும் 189 பே ருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் 17 வலயக்கல்விக் காரியாலயங்கள் 48 கோட்டக்கல்விக்காரியாலயங்கள் ஆகியவற்றில் இ.க.நி.சேவை வகுப்பு 1 இல் 07 அதிகாரிகளும் வகுப்பு 2 இல் 16 அதிகாரிகளும் வகுப்பு 3 இல் 73 அதிகாரிகளும் தற்போது சேவையிலுள்ளனர்.
இது போதாது. கல்வி நிருவாகம் கல்வி திட்டமிடல் பாடசாலை மேற்பார்வை கலைத்திட்ட அமுலாக்கம் கல்வி முகாமைத்துவம் கல்வி அபிவிருத்திபாட அபிவிருத்தி போன்ற இன்னோரன்ன கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்வதில் பாரிய அசௌகரியங்கள் சவால்கள் எதிர்நோக்கப்படுகின்றன.
இதனால் கிழக்கின் கல்வி அபிவிருத்தி நாட்டின் ஏனைய மாகாணங்ளோடு ஒப்பிடுகையில் கீழ்நிலையிலுள்ளது. இது தவிர்க்கமுடியாதது. உரிய வளங்களையும் உள்ளீடுகளையும் வழங்கிவிட்டு கல்விஅபிவிருத்தியில் பின்னிற்பது ஏன்? எனக் கேட்டால் நியாயம். ஆனால் உரிய வளங்களை வழங்காமல் ஒப்பிடுவது பொருத்தமானதல்ல.
வகுப்பு 1 இல் 13 பேருக்கும் வகுப்பு 2 இல் 55 பேருக்கும் வகுப்பு 3 இல் 121 பேருக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனை தற்போது இலங்கை அதிபர் சேவை மற்றும் ஆசிரியர் சேவையைச் சேர்ந்தோரே கடமை நிறைவேற்றி வருகின்றனர். இவர்களில் பலர் 10 வருடங்களுக்கு மேலாக கடமை நிறைவேற்று தர அதிகாரிகளாக பணியாற்றிவருகின்றனர். இவர்களில் தகுதியானோரை நிரந்தரமாக்கவேண்டும்.
0 Comments