Advertisement

Responsive Advertisement

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கவுள்ள சந்திரிக்கா!

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 22 ஆம் திகதி மங்கள சமரவீர வீட்டில் நடைபெற்ற இராபோசனத்தின் பின்னர் நடைபெற்றுள்ளது. இந்த விருந்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட போதும் ரணில் மற்றும் சந்திரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகள் தனியான அறையொன்றில் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியை நிறுத்தினால் வெற்றிப் பெறும் விதம் குறித்து மங்கள சமரவீர தெளிவுபடுத்தியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்டவர்களாக ரணில் மற்றும் கரு ஜயசூரிய ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதியை பொதுவேட்பாளராக நிறுத்தினால் அரசாங்கத்தில் இருக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அதிருப்தியாளர்களின் ஆதரவை பெற முடியும் என மங்கள இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார். அப்படியான அதிருப்தியாளர்களின் பெயர் விபரங்களையும் மங்கள வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சரத் பொன்சேகாவின் ஜனநாயகக்கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்துவது எனவும் தேவை ஏற்பட்டால் ஜே.வி.பியுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியாதவர்கள் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலில் கிடைக்கும் தோல்விக்கு தனது தலையை கொடுக்கக் கூடிய ஒருவரை தேடி வந்த ரணிலுக்கு இது பெறுமதியான சந்தர்ப்பம் என்பதால் அவர் இந்த தீர்மானத்திற்கு தலை அசைத்துள்ளார்.
எனினும் மகிந்த ராஜபக்‌சவை சந்திரிக்காவினால் தோற்கடிக்க முடியும் என மங்கள சமரவீர திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments