‘‘ஐயோ! அம்மா… இந்த மனுசன் என்னை அடித்துக் கொல்லப் பார்க்கிறார் நான் வேறொரு வீட்டிலிருந்து தான் இப்போது பேசுகிறேன். உடனடியாக வந்து என்னைக் கூட்டிச் செல்லுங்கள்.’’
இப்படியான ஒரு தொலைபேசி அழைப்பு யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுகால்மடம் பிரதேசத்திலிருந்து தன் மகளிடமிருந்து தாயொருவருக்கு வந்துள்ளது. கடந்த மாதம் 22 ஆம் திகதி இரவு வந்த இத்தொலைபேசி அழைப்பால் தாய் மிகுந்த பதற்றத்துக்குள்ளானார்.
மகள் கூறிய விடயத்தை தாயான சுமதி தனது கணவனிடம் மிகுந்த கவலையுடன் கூறினார். ‘‘ அப்படியா – சரி நாம் போய் மகளை அழைத்து வருவோம்’’ என்று கணவர் ராஜசுந்தரம் தெரிவித்தார். அதனடிப்படையில் சுமதி நாகவிஹாரை பலாலி வீதியிலிருந்த தனது வீட்டிலிருந்து முச்சக்கரவண்டியில் மகளை பார்ப்பதற்காக ஆறுகால்மடம் பிரதேசத்துக்குச் சென்றார்.
சுமதியை பின் தொடர்ந்து அவரது கணவர் ராஜசுந்தரமும் இரு மகன்மார்களும் அயலவர் ஒருவருமாக நால்வரும் இரு மோட்டார் சைக்கிளில் சென்றனர். மகளின் கணவரான ராகுலின் வீட்டிற்கு சற்று தொலைவில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு நால்வரும் ராகுலின் வீட்டை நோக்கி நடந்து சென்றனர். மனைவி சுமதியோ இவர்களுக்கு சற்று முன்னரே அங்கு சென்றிருந்தார்.
சுமதியும் அவரது கணவரும் கூடவே வந்த அயலவருடன் மகள் மறைந்திருந்த வீட்டிற்குச் சென்றனர். அதேவேளை, மகன்மார் இருவரும் ராகுலின் வீட்டிற்குச் சென்றார்கள். அவர்கள் சென்று பார்த்த போது ராகுல் மதுபோதையில் இருந்துள்ளார். தலைக்கவசத்துடன் (ஹெல்மட்) சென்ற இருவரும் ராகுலை தலைக்கவசத்தால் தாக்கியுள்ளனர். பதிலுக்கு ராகுலும் தாக்கியுள்ளார்.
இப்படியாக ராகுலின் வீட்டில் ஆரம்பித்த சண்டை மெல்ல … மெல்ல நகர்ந்து வீதிக்கு வந்தது. ராஜசுந்தரமும் இரு மகன் மார்களும் ராகுலை தாக்கியதை அவதானித்த ராகுலின் தந்தை தனது மகனை தாக்க வேண்டாம் என்று கைகளை பிடித்து தடுத்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் ராகுலின் மாமனார் தனது இடுப்பிலிருந்த கத்தியை எடுத்து ராகுலின் நெஞ்சில் ஓங்கி குத்தியுள்ளார்.
கத்திக்குத்திற்கு உள்ளான ராகுல் அவ்விடத்திலேயே வீழ்ந்து உயிர் துறந்தார். அதன் பின்னர் ராஜசுந்தரம் தனது மகன்மார்களுடன் மகள் இருக்கும் இடத்துக்கு சென்றார். அங்கு மனைவியும் மகளும் ஆறுமாத பேரக்குழந்தையுடன் இருந்துள்ளனர். எனவே அவர்களையும் அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கி சென்றார் ராஜசுந்தரம்.
இவ்வாறு வீட்டிற்குச் சென்ற ராஜசுந்தரம் தனது மகளை அவரது கைக்குழந்தையுடன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பிவைத்தார். அதாவது கணவர் தன்னை தாக்கி வீட்டிலிருந்து விரட்டி விட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறே மகளை அனுப்பிவைத்தார். மகள் சகோதரனையும் அழைத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற போது ராகுலின் கொலை தொடர்பான செய்தி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
ராகுலின் கொலை தொடர்பான செய்தியறிந்த பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு சென்று பார்த்த போது ராகுலின் சடலம் அவ்விடத்தில் கிடந்ததுடன் அதனைச் சுற்றி கிராமத்தவர்கள் கூடியிருந்தனர். அத்தோடு இக்கொலை தொடர்பான தகவல்களும் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
ராகுலின் கொலை தொடர்பான தகவலறிந்த பொலிஸார் உடனடியாக நாகவிஹாரை பலாலி வீதியில் அமைந்துள்ள ராஜசுந்தரத்தின் வீட்டிற்கு விரைந்துள்ளனர். அங்கு சென்ற பொலிஸார் ராஜசுந்தரத்தையும் இரு மகன்மார்களையும் அவர்களுடன் சென்ற அயலவரொருவரையும் கைது செய்துள்ளனர்.
நால்வரையும் கைது செய்த பொலிஸார் அவர்களை தனித்தனியாக விசாரணைக்குட்படுத்தினர். அதன்போது ‘‘ தங்கையை தாக்குவதாக கிடைத்த தகவலையடுத்து நாம் உடனடியாக அங்கு சென்றோம். ஆனால் தந்தை கத்தியை எடுத்துவந்தது எமக்கு தெரியாது’’ என மகன்மார்கள் வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
‘‘மகளை அடித்துத் துன்புறுத்துவதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு செல்வதற்கு முன்னர் யாருக்கும் தெரியாமல் கத்தி ஒன்றை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டேன்’’ என இக் கொலையின் பிரதான சந்தேகநபரான ராஜசுந்தரம் பொலிஸில் வாக்கு மூலம் வழங்கியுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களைப் போலவே மற்றுமொரு சந்தேகநபரான அயலவரிடமும் பொலிஸார் பெற்றுள்ளனர். நான் இவர்களுடன் சென்ற போது கொலை நடந்த இடத்துக்கு செல்லவில்லை. மாறாக தாக்குதலுக்குள்ளாகி கைக்குழந்தையுடன் மறைந்திருந்த நண்பனின் மகள் இருந்த வீட்டருகிலேயே இருந்தேன் என கூறினார்.
இவ்வாறு கொலை நடந்த இடத்தில் இருந்தவர்கள் அயலவர்கள் மற்றும் சந்தேகநபர்கள் என பலரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்ட பொலிஸார் உயிரிழந்த ராகுலின் மனைவியிடமும் வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டதுடன் மேலும் பல முக்கிய தகவல்களையும் அறிந்து கொண்டனர். ராகுலின் மனைவி பொலிஸில் கண்ணீர் மல்க தனது சோகத்தை கொட்டித் தீர்த்தாள்.
‘‘ எனது வயது இருபத்தி நான்கு அவருக்கு முப்பது. நாங்கள் இருவரும் காதலித்தே திருமணம் முடித்தோம். பாடசாலை செல்லும் போது தான் இருவருக்குமிடையில் காதல் தொடர்பு உண்டானது.
நாங்கள் காதலித்து திருமணம் முடித்த போதும் எனது பெற்றோர் நிறைய தங்க நகைகள் கொடுத்தார்கள். ஆனால் எனது கணவர் சரியான தொழில் ஒன்று செய்யாததால் எனது பெற்றோர் கொடுத்த நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக விற்றுக் குடித்தே முடித்தார்.
இவ்வாறு திருமணம் முடிந்த நாள் முதல் நான் மிகுந்த வேதனையுடனும் கவலையுடனுமே பொழுதை கழித்து வந்தேன். என்னிடமிருந்த தங்க நகைகள் எல்லாம் வாங்கி விற்றதன் பின்னர் என்னுடன் சண்டையிடத் தொடங்கினார். அடித்தார், துன்பப்படுத்தினார். இருந்தும் அவற்றை நான் தாங்கிக் கொண்டிருந்தேன்.
குடும்பத்தினர் நிலையை அறிந்த எனது தந்தை அப்போது முச்சக்கர வண்டியொன்றினை வாங்கி கணவருக்கு கொடுத்தார். அதனை வைத்து தொழில் செய்து மனைவி பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு உதவி செய்தார்.
ஆனால் கணவரோ எனது தந்தை வாங்கிக் கொடுத்த முச்சக்கர வண்டியையும் விற்று எல்லாப் பணத்தையும் வீணடித்தார். தினந்தோறும் நன்றாக மது அருந்திவிட்டு வீடு வரும் அவர் என்னுடன் சண்டையிட்டு அடிப்பார்.
எனக்கு ஒன்பது மாதத்தில் குழந்தையொன்றும் இருக்கிறது. அக்குழந்தைக்காக எல்லாவற்றையும் நான் ெபாறுத்துக் கொண்டேன். கணவருடைய வீட்டில் அவருடைய பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு முன்பாக வைத்தே என்னை தாக்குவார்.
அதே போன்றே கடந்த மாதம் 22 ஆம் திகதி மதியத்திலிருந்தே என்னுடன் சண்டை பிடிக்க ஆரம்பித்தார். மதியம் என்னை அடித்து விட்டு வீட்டிலிருந்து சென்றவர், அன்று மாலை மது போதையில் வீடு வந்தார். வந்ததும் மீண்டும் என்னுடன் சண்டையிட்டு என்னை தாக்கத் தொடங்கினார். அதற்குப் பிறகு என்னை வீட்டிலிருந்து வெளியில் தள்ளி, விரட்டி, விரட்டி அடித்தார். நானோ குழந்தையும் தூக்கிக் கொண்டு அழுது கொண்டே ஓடினேன்.
இப்படியாக ஓடிப் போய் ஒரு வீட்டிற்குள் நுழைந்து அவர்களிடம் நடந்ததை கூறி எனது பெற்றோருடன் கதைப்பதற்கு தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்தித் தருமாறு கேட்டேன். அதற்கு பிறகு அவர்கள் எனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
எனது அம்மாவுடன் தொலைபேசியில் கதைத்த நான் என்னை எப்படியாவது வந்து கூட்டிச் செல்லுங்கள் என்று கேட்டேன் என்று பொலிஸ் நிலையத்தில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பலரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்துகொண்ட பொலிஸார் இக்கொலை தொடர்பான பிரதான சந்தேக நபரான ராஜசுந்தரத்தின் உதவியுடன் கொலைக்காக பயன்படுத்தப்பட்ட கத்தியையும் மீட்டுள்ளனர். இக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அடங்கலாக நால்வரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன்
அவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி த சில்வாவின் கண்காணிப்பில் யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(இச் சம்பவத்தில் வருபவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)
0 comments: