இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கப்படவுள்ளதாக இந்தியாவின் பிரிஐ செய்தி நிறுவனத்தை ஆதாரம் காட்டி, இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசாங்க வட்டாரங்கள் கூறியதாக வந்துள்ள இந்தச் செய்திகளின்படி, இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டுக்கான இந்திய பிரதிநிதிகள் குழுவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் அவர்களே தலைமை தாங்குவார் என அதில் கூறப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இது குறித்து இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இந்தியப் பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார் என்ற இந்த முடிவு குறித்து அதிகாரபூர்வமாக இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
0 Comments