Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்பது தமிழர்களை அவமானப்படுத்தும் செயல் - அரியநேந்திரன்

பொதுநலவாய மாநாட்டில் இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டால் உலகத்தில் வாழும் ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமானப்படுத்தும் செயலாகவே அது கருதப்படும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், வடமாகாண முதலமைச்சர் இந்தியப் பிரதமருக்கு விடுத்த அழைப்பு தவறான அர்த்தத்தில் விமர்சிக்கப்படுகிறது. உண்மை நிலை அதுவல்ல இன்றைய வடக்கின் நிலையை அவர் நேரில் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலுடனேயே அவ்வழைப்பு விடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதை பொதுநலவாயத்துடன் தொடர்புபடுத்துவது தவறானதொரு கண்ணோட்டமாகும். இசைப்பிரியாவின் காணொளி விவகாரம் மற்றும் அரசாங்கத்தின் அடாவடித்தனங்கள் மலிந்துள்ள இவ்வேளையில் இந்தியப் பிரதமர் பொதுநலவாய மாநாட்டுக்கு வருவாராக இருந்தால் அது இலங்கைத் தமிழர்களையும் தமிழக உறவுகளையும் ஏனைய உலகத் தமிழர்களையும் அவமதிக்கும் ஒரு செயலாகவே அமைந்து விடும்.

முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் அழைப்பையேற்று இந்தியப் பிரதமர் வருவதாக இருந்தால் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை அண்டிய காலப்பகுதியில் வரவேண்டும். பொதுநலவாய மாநாடு நடைபெறும் இக்காலப்பகுதியை உலகத் தமிழர்களுக்காக, அதுவுமின்றி கதியற்று நிற்கும் இலங்கைத் தமிழர்களை மனங்கொண்டு அவர் புறக்கணிக்க வேண்டும். என்று கிழக்கு மக்கள் சார்பில் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
அதுவுமின்றி , இந்தியப்பிரதமர் வருவதாக இருந்தால் அவர் கிழக்கிற்கும் விஜயம் செய்ய வேண்டும். சம்பூர் அனல் மின்நிலைய அபிவிருத்தி என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றி குடியிருக்க அனுமதிக்காமல் செய்து கொண்ட அனல் மின் நிலைய ஒப்பந்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை அவர் நேரில் சந்தித்து உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். அத்துடன் கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்கள் பலாத்காரமாக கபளீகரம் செய்யப்படுகின்றன. அரசியல் ஆதிக்கம் கொண்டவர்கள் என்ற காரணத்தினால் படையுதவியுடன் நிலங்கள், தரிசு நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், என பறிக்கப்படுகின்றன. இவற்றைத் தெரிந்துகொள்ளவாவது இந்தியப் பிரதமர் கிழக்குக்கும் விஜயம் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.
அதுவுமின்றி பொதுநலவாய மாநாட்டிற்கு வருகை தருகின்ற உலகத்தலைவர்கள் கிழக்குக்கும் விஜயம் செய்ய வேண்டும். கிழக்கில் தமிழ் மக்கள் எத்தகைய நெருக்குவாரத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள். என்பதை அவர்கள் நேரில் வந்தால் புரிந்து கொள்ள முடியுமென அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments