Home » » படிப்பறிவில்லாதவர்கள், ஆடு, மாடுகள் போல நடந்து கொண்டனர்! - காணாமற்போனவர்களின் போராட்டம் குறித்த பொலிஸ் அதிகாரியின் கருத்து இது.

படிப்பறிவில்லாதவர்கள், ஆடு, மாடுகள் போல நடந்து கொண்டனர்! - காணாமற்போனவர்களின் போராட்டம் குறித்த பொலிஸ் அதிகாரியின் கருத்து இது.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடாத்தப்பட்ட காணாமல் போனவர்களது போராட்டத்தில் தாங்கள் யாரையும் தாக்கவில்லை என்று யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்தார். நேற்று யாழ் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு அருகில் இடம்பெற்ற காணாமல் போனோரது போராட்டத்தில் கிறீஸ்தவ பாதிரியார் ஒருவர் பொலிஸாரினால் தாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது குறித்து ஊடகவியலாளர் ஒருவரினால் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், டேவிட் கமரூன் வருகை தந்திருந்த போது நாங்கள் அவருக்கு பாதுகாப்புக் கொடுப்பதற்காகவே அங்கு சென்றோமே தவிர யாரையும் தாக்கும் எண்ணம் எங்களிடம் இருக்கவில்லை. ஒரு நாட்டு பிரதமர் வரும் போது அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது எமது கடமை. ஏனெனில் அவருக்கு ஏதாவது நடந்துவிட்டால் எமது நாட்டின் கௌரவம் பாதிக்கப்படும். எனினும் இவ்வாறானதொரு முக்கிய பிரமுகர் வரும் போது பாதுகாப்புக் கடமைக்கு துப்பாக்கியை கொண்டு செல்வது அவசியமானது. எனினும் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. லத்தி மட்டுமே எடுத்துச் செல்லப்பட்டது. இருப்பினும் துரையப்பா மைதானத்தில் நியூசிலாந்தைச் சேர்ந்தவர்கள் வந்திறங்கும் போது மக்கள் ஆடுமாடுகள் போல நடந்து கொண்டனர். அவ்வாறு இருக்கும் போது எப்படி அவரைச் சந்திக்க அனுமதிப்பது.
படிப்பறிவு இல்லாதவர்கள் மேற்கொண்ட இந்த செயல் மிகவும் கவலையளிக்கின்றது. எனினும் கமரூனை சந்திப்பதற்கு ஒரு ஏற்பாட்டினை செய்திருந்தால் அந்த இடத்தில் நாங்கள் விட்டிருப்போம். எனினும் அவ்வாறு ஒரு ஏற்பாடு இல்லாத இடத்தில் மக்களின் தன்னிச்சையான முடிவுகளுக்கு இடமளிக்க முடியாது. பிரதமருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது எமது கடமை. இருப்பினும் நாங்கள் அங்கு கலந்து கொண்டவர்களில் ஒருவரைக் கூட தாக்கவில்லை. டேவிட் கமரூன் உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு சென்றிருந்தார். சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்திற்கு சென்றிருந்தார். அங்குள்ளவர்கள் அவருக்கு அருகில் நின்று பேசிக்கொண்டனர் அதற்குப் பொலிஸார் இடமளித்தனர். இது அவர்களது கண்ணியத்தன்மையைக் காட்டுகின்றது. என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |