இன்று திங்கட்கிழமைகாலை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பெரும் அமளிதுளியில் முடிந்தாக தெரிவிக்கப்படுகின்றது.இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் இஸ்லாமிய அரசியல் வாதிகளுக்கிடையில் பெரும் வாக்குவாதம் இடம்பெற்றது.இதனையடுத்து
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று – ஆரையம்பதிப் பிரதேசத்திலுள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஒன்று நியமனம் செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் திஙகட்கிழமை (18) காலை ஆரம்பமானது. இக்கூட்டத்திலேயே இம் முடிவு அறிவிக்கப்பட்டது.
இந்தக்குழுவில், மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.பாஸ்கரன், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், காணி
உதவி ஆணையாளர் நஜீம், நில அளவைகள் திணைக்கள அத்தியட்சகர் ஆகியோர் அடங்குகின்றனர்.
நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவானது இரண்டு வாரங்களுக்குள் இந்தப்பிரச்சினைகள் குறித்த மனுக்களை ஏற்றுக் கொண்டு அதன் பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், பிரதி அமைச்சர்கள், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் கூடி ஆராய்வது என்றும் அது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மண்முனைப்பற்று – ஆரையம்பதி பிரதேச செயலயகப்பிரிவுக்குள் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்ட நடத்தப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது. இந்த அமளியை முடிவுக்குக் கொண்டு வரும் வகையிலேயே இந்த முடிவு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை
ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள தமது காணிகளில் குடியேற சிலர் தடை விதிப்பதாகவும் தமது காணியில் தமது மக்கள் குடியேற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்து மண்முனைப்பற்றில் உள்ள சில முஸ்லிம் மக்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்முனைப்பற்று பிரதேசத்தில் உள்ள தமக்கு சொந்தமான காணிகளை பராமரிப்பதற்கு சிலர் தடைகளை ஏற்படுத்துவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பரீட் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன் இன்றைய தினம் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் கூட்டத்துக்கு வந்தவர்களும் தடுக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிராகவும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தனுக்கு எதிராகவுகவும் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
கடந்த கால பயங்கரவாதத்தினால் தாங்கள் இடம்பெயர்ந்த நிலையில் மீண்டும் தமது பிரதேசத்துக்கு சென்று தமது காணிகளை பராமரிக்க முடியாத நிலையேற்பட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை சம்பவ இடத்துக்கு வருகைதந்த மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினர்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட செயலகத்துக்குள் கூட்டத்துக்கு செல்வோர் அனுமதிக்கப்பட்டதுடன் தமக்கு தீர்வொன்றை பெற்றுத்தருமாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் கலகமடக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
0 Comments