Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

எங்களுக்குக் காலஎல்லை நிர்ணயிக்காதீர்கள்! -செய்தியாளர் சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷ.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சர்வதேச ஊடகங்கள் உதவ வேண்டுமே தவிர மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் செயற்படக் கூடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் நிறைவு நாள் செய்தியாளர் மாநாடு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர்நாயகம் கமலேஷ் சர்மா ஆகியோர் இதற்குத் தலைமை தாங்கினர்.

இச்செய்தியாளர் மாநாட்டில்,நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைத் தாமதமின்றி எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் கால எல்லையை குறிப்பிட்டுள்ளார். இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு காலஅவகாசம் தேவை என நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். உங்களுக்கு எவ்வளவு கால அவகாசம் தேவை என்று குறிப்பிட முடியுமா என வெளிநாட்டு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அக்கேள்விக்கு ஜனாதிபதி தொடர்ந்தும் பதிலளிக்கையில், இலங்கைக்கென அரசியலமைப்பு இருக்கின்றது. வலுவான சட்டம் ஒழுங்கு ஏற்பாடும் உள்ளது. அதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். அதனடிப்படையிலேயே எந்த நடவடிக்கையையும் நாம் முன்னெடுக்க வேண்டும். மக்கள் மத்தியில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளை எமது அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. அவற்றை எடுத்த எடுப்பிலேயே செய்து விடமுடியாது.
நாம் இதற்கென பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைத்துள்ளோம். அக்குழுவில் அனைத்துக் கட்சிகளும் பங்குபற்றுகின்றன. அவற்றில் 17 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு தீர்வை வழங்க வேண்டும். ஒருவர் மாத்திரம் இதைத்தான் செய்ய வேண்டும் என்று எங்களுக்குக் கூற முடியாது. என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் தெரிவிக்க வேண்டும். முப்பது வருட யுத்தத்தின் பின்னர் நாம் இப்போது நாட்டை ஜனநாயக ரீதியில் இயல்பு நிலைக்குக் கொண்டு வந்துள்ளோம். மக்களின் மனங்களை மாற்ற வேண்டும். இனங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும். தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் எவராக இருந்தாலும் அவர்கள் எனது மக்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது எனது பொறுப்பு. வடக்கு, கிழக்கில் ஜனநாயக ரீதியில் ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் போன்றவற்றை நடத்தியுள்ளோம்.
மாகாணசபைத் தேர்தலில் வடக்கில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வென்றுள்ளார்கள். அங்கு சிங்கள மக்களும், முஸ்லிம்களும் சிறுபான்மையினராக உள்ளார்கள். அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. அனைத்து மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு எமக்குள்ளது. நல்லிக்க ஆணைக் குழுப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு எங்களுக்குக் கால எல்லை நிர்ணயிக்காதீர்கள். எங்களுக்கு உதவுங்கள் எமது மக்களைப் பிரிக்க வேண்டாம் என்று நான் வெளிநாட்டு ஊடகங்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.
நாம் எதிர்க்கட்சியில் இருக்கும் போதே இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் தென்னாபிரிக்க அனுபவங்களை பெற அங்கு சென்றிருந்தோம். அந்நாட்டின் அனுபவங்களைப் பெற நாம் தயாராகவே இருக்கிறோம். என்று தெரிவித்தார்.
இந்தச்செய்தியாளர் மாநாட்டில் கயானா ஜனாதிபதி டொனால்ட் ரபீந்திரநாத் ரமோட்டால், மலேசியப் பிரதமர் டத்தோ முஹம்மத் நஜீப் அப்துல் ரஸ்ஸாக், தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜாகொப் சுமா, செய்ன்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் நாட்டின் பிரதமர் டென்ஸில் டக்ளஸ், ஆகியோரும் பங்குபற்றினார்கள்.

Post a Comment

0 Comments