சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை வெளியேறுவதற்கு அந்நாட்டு அரசினால் வழங்கப்பட்ட விஷேட பொது மன்னிப்புக் காலம் முடிவடைந்துள்ள நிலையில் பொது மன்னிப்புக்கு உட்பட்ட சுமார் பத்தாயிரம் இலங்கையரும் நாடு திரும்பியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாரியம் தெரிவிக்கின்றது.
கடந்த மே மாதம் 4 ஆம் திகதி முதல் நவம்பர் 3 ஆம் திகதி வரை இந்த பொது மன்னிப்புக் காலம் அந்நாட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே சுமார் 16,000 இலங்கையர்கள் சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கிருப்பதாக அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதுவராலய தகவல்கள் மூலம் அறியமுடிந்தது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாயப்பு வாரியத்தின் துணை பொது முகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான மங்கள ரன்தெனிய, பொது மன்னிப்பு வழங்கப்பட்ட காலத்துக்குள் அதனைப் பெற தகுதியுடைய சுமார் 10,000 பேரும் நாட்டிற்கு அழைக்கப்பட்டு விட்டதாகக் கூறினார்.
மேலும் பெண்கள் உட்பட ஏனைய 6,000 பேரைப் பொறுத்த வரையில் சட்ட விரோதமாக தங்கியிருந்தாலும் சவுதி அரேபிய அரசாங்கத்தின் பொது மன்னிப்பு வரையறைக்குள் அவர்கள் உட்படாதவர்கள் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
அதாவது விசா இன்றி தங்கியிருந்தமை, கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யாமை போன்ற அந்த நாட்டு சட்ட திட்டங்களை இவர்கள் மீறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியானவர்களை நாட்டுக்கு திருப்பி அழைப்பதற்கான முயற்சிகள் சவுதியில் உள்ள இலங்கை தூதுவராலயத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அவர்களை நாட்டுக்கு அழைப்பது தொடர்பில் பிரச்சினையாகவே உள்ளது என்றும், ஆயினும் இதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் மங்கள ரன்தெனிய தெரிவித்தார்.
பொது மன்னிப்புக் காலத்துக்குள் வெளியேற வேண்டுமென்ற அறிவிப்பு வெளியானதும் தாங்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியதாக நாடு திரும்பியவர்களில் ஒருவரான மட்டக்களப்பு சத்துருகொண்டானை சேர்ந்த சின்னராசா சிவநிதி இவ்வாறு தெரிவிக்கின்றார்.
அந்த நாட்டுக்கு சட்ட ரீதியாக முகவர்கள் ஊடாக தொழில் பெற்று சென்று, தொழிலிலும் சம்பளத்திலும் ஏமாற்றப்பட்டதன் காரணமாகவே சட்ட விரோதமாக தங்கியிருந்து வேறு இடங்களில் தொழில் புரிய நேரிட்டதாக அவர் கவலையுடன் குறிப்பிட்டார்.
காத்தான்குடியை சேர்ந்த மொகமட் சஜீத், பொது மன்னிப்புக் காலம் முடிவடைவதற்கு அண்மித்த நாட்களில் அந்நாட்டு காவல் துறையினரின் சோதனைகளும் கெடுபிடிகளும் அதிகரித்திருந்தது என்கின்றார்.
நாடு திரும்புவதை துரிதப்படுத்துவதற்காகவும் அதற்கான வேலைகளை இலகுவாக செய்வதற்கும் மேலதிக செலவாக 1500 சவுதி ரியால் தனக்கு தேவைப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
உள்நாட்டில் தங்களால் தொழில் பெற முடியாத நிலையே தொடர்ந்தும் இருப்பதால் மீண்டும் வேறொரு நாட்டிற்கு தொழில் நிமித்தம் செல்வதையே அவர்களில் பலரும் விரும்புகின்றார்கள்.
பொது மன்னிப்பு காலத்திற்குள் வெளியேறத் தவறி, தொடர்ந்தும் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக தமது நாட்டு குடிவரவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
அதாவது சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு 2 வருடச் சிறைத்தண்டனை அல்லது சுமார் 10,000 சவுதி ரியால் தண்டப்பணமாக செலுத்த நேரிடும் என அந்நாட்டு சட்டம் கூறுகின்றது.
0 Comments