வலி. வடக்கு பிரதேசசபை தலைவர் சுந்தரலிங்கம் சுகிர்தனை அச்சுறுத்தும் முகமாக சுன்னாகத்திலுள்ள அவரது வீட்டிற்கு முன் இன்று (11) காலை மாட்டின் மண்டையோடு வைக்கப்பட்டுள்ளது.
வலி. வடக்கு பிரதேசத்தில் இடம்பெறும் வீடழிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குறித்த பிரதேச மக்களை அவர்களது சொந்த காணியில் மீள்குடியேற்றுமாறும் கோரியும் நாளை (12) இடம்பெறவுள்ள உண்ணாவிரத போராட்டத்தை குழப்பும் நோக்கமாகவே இவ்வாறு மாட்டின் மண்டையோடு வைக்கப்பட்டுள்ளதாக பிரதேசசபை தலைவர் சுகிர்தன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் தனது கையடக்க தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய இனந்தெரியாத நபர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த கூடாது என கூறி அச்சுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறாக இரண்டு வெவ்வேறு தொலைபேசி இலக்கங்களிலிருந்து தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் பின்னதாக குறுந்தகவல் மூலமும் தான் அச்சுறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
´நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்தினால் தலையற்ற முண்டமே வீட்டிற்குச் செல்லும்´ எனக் கூறி இனந்தெரியாத நபர்கள் தன்னை அச்சுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.
பலாலி கிழக்கு மற்றும் வடக்கு பிரதேச மக்கள் தமது காணி உறுதிப் பத்திரங்களை தன்னிடம் காண்பித்து, தமது காணிகளை மீட்டுத்தருமாறு கோரி நேற்று (10) கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர் எனவும் அதன் பின்னதாக தான் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டதாக சுகிர்தன் மேலும் தெரிவித்தார்.
0 Comments