Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு காத்தான்குடி அனைத்து உணவகங்களிலும் புகைத்தல் தடை!


காத்தான்குடி நகர சபை பிரிவிட்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் உணவு விற்பனை செய்யும் ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் புகைத்தல் மற்றும் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர்; எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார். இதற்கான தீர்மானம் காத்தான்குடி நகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார். 


இவ்விடயம் தொடர்பில் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்ததாவது, 
இம்மாதம் நவம்பர் 10ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் சிகரட் பாவிப்பது மற்றும் விற்பனை செய்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் மீறும் பட்சத்தில் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

அது மாத்திரமல்லாமல் எதிர்காலத்தில் காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கடைகள் உள்ளிட்ட சிகரட் விற்பனை செய்யும் சகல இடங்களிலும் சிகரெட் விற்பனை முற்றாக தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்கு முன்னோடியாகவே ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இதேவேளை காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் கை துடைப்பதற்கு அச்சிட்ட கடதாசிகள் பயன்படுத்தக்கூடாது எனவும் அதற்கு பதிலாக வெள்ளை கடதாசிகளையே பயன்படுத்த வேண்டும் எனவும் ஹோட்டல்களில் உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் எண்ணையை மீள பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் குறிப்பிட்டார். 

குறித்த தடை தொடர்பில் அறிவித்தல்கள் காத்தான்குடி பிரிவிலுள்ள சகல ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள், உணவகங்களில் காட்சிப்படுத்தப்படும் எனவும் இதற்கு உணவு தயார் செய்யும் சகல ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள், உணவகங்களின் உரிமையாளர்கள் பூரண ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் இல்லாத பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 


இதற்காக காத்தான்குடி சுகாதார அலுவலகத்துடன் இணைந்து பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நகர சபை ஊழியர்கள் பரிசோதணை நடவடிக்கைகளிலும் ஈடுபடுவர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

Post a Comment

0 Comments