மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல் தரை நிலங்களில் அத்துமீறி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்ற அம்பாறை மாவட்ட விவசாயிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல் தரை நிலம் தொடர்பான கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதே அவர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அங்கு இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது;
“மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரிய மேய்ச்சல் தரை நிலங்களில் அம்பாறை மாவட்ட விவவசாயிகள் சட்ட விரோதமாக அத்துமீறி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்கள் தமது மாடுகளை விடுவதில் பலத்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இது ஒரு சட்ட விரோதமான செயலாகும் தமது பாரம்பரிய மேய்ச்சல் தரை நிலங்களில் மாடுகளை விடுவதற்கு தடுக்கப்படுவதானது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பண்ணையாளர்களுக்கு செய்யும் பெரும் அநீதியாகும்.
ஆகையினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மேய்ச்சல் தரை நிலங்களில் அத்துமீறி விவசாயத்தில் ஈடுபட்டு வரும் அம்பாறை மாவட்ட விவசாயிகளை உடனடியாக வெளியேற்றுவது என இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இதற்கான உத்தரவை கிழக்கு மாகாண முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
0 Comments