இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியாவிற்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ முடியாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக சர்வதேச விசாரணை செய்வது குறித்து இலங்கைக்கான விஜயத்தின் போது கவனம் செலுத்தப்படுமென பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளமை குறித்து பி.பி.ஸி செய்திச் சேவை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லவிடம் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“அவ்வாறான அழுத்தங்களுக்கு அடிபணிய நான் நினைக்கவும் மாட்டேன் ஒரு நாடாகவும் நாம் அடிபணிய தயாரில்லை,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இறையான்மை, சுதந்திர அரசான இலங்கைக்கு அவ்வாறான அழுத்தங்களை மேற்கொள்வதாக பிரித்தானிய பிரதமர் அவ்வாறு கூறியுள்ளாரா என தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டன் தமிழர் பேரவை பிரதிநிதிகள் சிலருடன் கடந்த வியாழக்கிழமை லண்டனில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது அந்த உறுதிமொழியை அளித்த பிரதமர், என்றபோதிலும் சர்வதேச விசாரணையொன்று தேவைப்படுவது சுயாதீன விசாரணையொன்று முறையாக நடத்தப்படாத பட்சத்திலேயே ஆகும் என அவர் தெரிவித்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களுக்கான மாநாட்டின் கொள்கைகளுக்கு அப்பால் சென்று ‘தனிப்பட்ட விடயங்கள்’ குறித்து கதைப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லையென அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
0 Comments