இலங்கையில் நடைபெறவிருக்கும் பொது நலவாய மாநாட்டில் இந்திய அரசாங்கம் கலந்துகொள்ளக்கூடாது என தமிழ் நாட்டுமுதல்வர் ஜெயலலிதா சட்ட சபையில் நிறைவேற்றிய தீர்மானம் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பொறுத்தவரையில் ஒரு திருப்பு முனையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் தமிழ் நாட்டு அரசாங்கம் எடுத்த முடிவு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இலங்கையிலேயே பல காலமாக இன்னல்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கும் இலங்கை தமிழ் மக்கள் சார்பில் தமிழ் நாட்டு முதல்வர் உட்பட பல கட்சிகள், இளைஞர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்து வருகின்றன. அதன் அடிப்படையிலேதான் தமிழ் நாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானமும் அமைந்துள்ளது. அதனை நாம் வரவேற்கின்றோம்.
|
இலங்கையில் 66 வருட காலமாக தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருந்த போராட்ட நேரத்தில் எத்தனையோ தமிழ் நாட்டு இளைஞர்கள் தீக்குளித்துக்கொண்ட வரலாறுகளும் உண்டு. இவற்றை இந்திய அரசு சிந்தித்து செயற்பட்டிருக்குமேயானால் இன்று தமிழ் மக்கள் பெருமூச்சுடன் வாழ்ந்திருப்பார்கள். அரசியல் தீர்வுக்காக 66 வருடங்களாக போராடிய தமிழ் மக்களுக்கு எந்த இறுதித்தீர்வும் இதுவரை கிடைக்கவில்லை என்பதனை நன்கு உணர்ந்த நாடும் இந்தியாதான். அதேநேரம் தமிழ் மக்களிடையே ஆயுத போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தது மாத்திரமல்ல, அவர்களை வளர்த்தெடுத்து சந்தர்ப்பம் பார்த்து அழிப்பதற்கு உறுதுணையாக இருந்த நாடும் இந்தியாதான்.
இந்திய அரசாங்கம் இலங்கையிலே வாழ்கின்ற தமிழ் மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள்தான் என்பதனை உணர்ந்திருந்தால் எப்போதோ தமிழ் மக்கள் உண்மையான சமாதானத்தினை அனுபவித்து இருப்பார்கள். ஆனால் இதுநாள் வரைக்கும் இந்தியா எமது மக்களின் அரசியல் தீர்வில் எட்ட நின்று பார்க்கும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளினால்தான் எமது இனம் இன்றும் இன்னல்பட்டுக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
|
0 Comments