ஈபிஆர்எல்எப் உறுப்பினர்கள் தனியாக பதவியேற்றனர்
வடமாகாண சபை முதல்வர் சி வி விக்னேஸ்வரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு மறுத்திருந்த 9 மாகாண சபை உறுப்பினர்களில், ஈபிஆர்எல்எப் கட்சியைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள் புதனன்று வவுனியாவில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
யாழ் மாவட்ட மாகாணசபை உறுப்பினர் க.சர்வேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் டாக்டர் சிவமோகன், வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர் எம்.தியாகராஜா ஆகிய மூவருமே இன்று புதன்கிழமை வவுனியாவில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
வவுனியா சட்டத்தரணி க.தயாபரன் இவர்களுக்கு சத்தியப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த வைபவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மற்றுமொரு வவுனியா மாவட்ட உறுப்பினராகிய இந்திரராஜா முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே புளொட் அமைப்பைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்திலும், மேலும் இருவர் கொழும்பிலும், மற்றுமொருவராகிய சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்காலிலும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதில் தாமதம் ஏற்பட்டிருந்த போதிலும், அக்டோபர் 25 ஆம் தேதி தனது கன்னி அமர்வை நடத்தவுள்ள வடமாகாணசபையின் முதலாவது நடவடிக்கையில் இருந்து, மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 30 பேரும் ஒன்றிணைந்து செயற்படுவார்கள் என்றும், அவர்களுக்கான வழிகாட்டலை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அதன் தலைவர் ஆர்.சம்பந்தனின் தலைமையில் செய்யும் என்று இன்றைய பதவியேற்பு நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
0 Comments