சிறைக் கைதிகள் மற்றும் அதிகாரிகளின் நலன்களை கருதிற்கொண்டு தயாரிக்கப்பட்ட புதிய யோசனைகள் அடங்கிய அறிக்கை இன்று (21) நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நீதி அமைச்சர் மிலிந்த மொறகொடவினால் நியமிக்கப்பட்ட, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஹெக்ட யாப்பாவின் தலைமையில் இயங்கிய குழு இந்த யோசனைகளை முன்வைத்துள்ளது.
இந்த யோசனைகள் அடங்கிய அறிக்கையை நீதி அமைச்சர் ஹக்கீம் இன்று (21) முற்பகல் பெற்றுக் கொண்டார்.
இதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், புதிய யோசனைகளை பாராளுமன்றில் சமர்ப்பித்து அமைச்சரவை அனுமதி பெற எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டார்.
சிறைக் கைதிகளை விடுதலை செய்வதற்கு தற்போது ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை, நீதி அமைச்சருக்கு கைமாற்றுமாறு புதிய யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையை தயாரித்த குழுவின் தலைவர் ஹெக்ட யாப்பா தெரிவித்தார்.
பல வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நன் நடத்தையைக் கொண்ட சிறைக் கைதிகளை ஒரு வாரத்திற்கு முன்னர் விடுதலை செய்யப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் யோசனை குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கைதிகள் குறித்து அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன் நடத்தைகளைக் கொண்ட சிறைக் கைதிகளை தண்டனைக் காலத்திற்கு முன்னதாகவே விடுதலை செய்யக் கூடிய அதிகாரம் நீதி அமைச்சருக்கு வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
சிறைக் கைதிகளைப் போலவே சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் நலன்தரும் யோசனைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஹெக்ட யாப்பா மேலும் கூறினார்.


0 Comments